ZIM vs SL, 1st T20I: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸ் அதிரடியாக விளையாடி 41 ரன்களைச் சேர்த்ததுடன், அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார்.
இலங்கை அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் இலங்கை அணி இரண்டிலும் வெற்றி பெற்று தொடரை வென்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் இன்று தொடங்கியது. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து, ஜிம்பாப்வே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு பிரையன் பென்னட் - மருமணி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிரையன் பென்னட் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுமுனையில் விளையாடிய மருமணி 7 ரன்னிலும், அடுத்து வந்த சீன் வில்லியம்ஸ் 14 ரன்னிலும், அதிரடியாக விளையாடிய கேப்டன் சிக்கந்தர் ரஸா 28 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். ஒருப்பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபக்கம் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த பிரையன் பென்னட் அரைசதம் கடந்து அசத்தினார்.
பின்னர் இப்போட்டியில் 12 பவுண்டரிகளுடன் 81 ரன்களை எடுத்த கையோடு பிரையன் பென்னட் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் ரியான் பர்ல் 17 ரன்களையும், முசெகிவா 11 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களைச் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய துஷ்மந்தா சமீர 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர்.
இதில் அபாரமாக விளையாடிய பதும் நிஷங்கா அரைசதம் கடந்து அசத்தினார். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பதும் நிஷங்கா 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 55 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து குசால் பெரேரா 4 ரன்களுக்கும், குசால் மெண்டிஸ் 38 ரன்களிலும் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய நுவனிந்து ஃபெர்னாண்டோ 7 ரன்னிலும், கேப்டன் சரித் அசலங்கா ஒரு ரன்னிலும், தசுன் ஷனகா 6 ரன்னிலும் என ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 142 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Also Read: LIVE Cricket Score
இருப்பினும் அடுத்து களமிறங்கிய கமிந்து மெண்டிஸ் அதிரடியாக விளையாடியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 41 ரன்களையும், துஷன் ஹெமந்தா 15 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன் மூலம் இலங்கை அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.