சமூக வலைதளத்தை நாடிய வீரர்; நடவடிக்கை எடுக்க காத்திருக்கும் கிரிக்கெட் வாரியம்!
கடந்த வாரத்தில் சமூக வலைதளத்தில் டிரெண்டிங் என்றால் அது ஜிம்பாப்வே அணி வீரர் ரியான் பார்ல் வெளியிட்ட பதிவு தான்.
ரியான் பர்ல் தனது ட்விட்டர் பதிவில், “எங்களுக்கு மட்டும் ஏதேனும் ஸ்பான்சர் கிடைக்க வாய்ப்பு இருந்தால் ஒவ்வொரு தொடர் முடிந்த பிறகும் எங்களது ஷூவுக்கு(காலணி) பசை ஒட்ட வேண்டிய அவசியம் இருக்காது” என பதிவிட்டுள்ளார். அவரது ட்வீட் வைரலானது.
இதையடுத்து புமா நிறுவனமானது ஜிம்பாப்வே அணி வீரர்களுக்கான உபகரண ஸ்பான்சர்ஷிப்பை ஏற்றுள்ளது. மேலும் அந்த அணியின் ஜெர்சிக்கு ஏற்றவாரே ஷூக்களை தயார் செய்து அனுப்பியது.
இதனால் ஜிம்பாப்வே அணி அடுத்து வரவுள்ள அயர்லாந்து அணிக்கெதிரான தொடரின் போது இந்த ஷூக்களை பயன்படுத்தும் என்று தெரிகிறது.
இந்நிலையில் கிரிக்கெட் வாரியத்தின் விதிகளை மீறி செயல்பட்டதாக ரியான் பார்ல் மீது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அத்தகவலில், கிரிக்கெட் வாரியத்தின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் ரியால் பார்ல் நடந்து கொண்டதாகவும், இதனால் அவர் மீது ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.