டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் சீன் வில்லியம்ஸ்!

Updated: Sun, May 12 2024 18:42 IST
Image Source: Google

ஜிம்பாப்வே அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரில் வங்கதேச அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. அந்தவகையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி இன்று தாக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களைச் சேர்த்தது. 

அந்த அணியில் அதிகபட்சமாக மஹ்முதுல்லா 54 ரன்களையும், நஜ்முல் ஹொசைன் சாண்டோ 36 ரன்களையும் சேர்த்தனர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே  அணியானது பிரையன் பென்னட் - கேப்டன் சிக்கந்தர் ரஸா ஆகியோரது அபாரமான ஆட்டத்தின் மூலம் 18.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

இதில் அதிகபட்சமாக சிக்கந்தர் ரஸா 72 ரன்களையும், பிரையன் பென்னெட் 70 ரன்களையும் சேர்த்தனர். மேலும் இப்போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த பிரையன் பென்னெட் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டி முடிந்த கையோடு ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் சீன் வில்லியம்ஸ் டி20 கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். 

ஜிம்பாப்வே அணிக்காக 2005ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான சீன் வில்லியம்ஸ், அந்த அணிக்காக 14 டெஸ்ட், 156 ஒருநாள் மற்றும் 81 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் டெஸ் கிரிக்கெட்டில் 4 சதம், மூன்று அரைசதங்கள் என 1034 ரன்களையும், 21 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 8 சதங்கள், 35 அரைசதங்களுடன் 4986 ரன்களையும், 83 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 174 ரன்களையும் விளாசியுள்ளார். 

மேற்கொண்டு 81 டி20 போட்டிகளில் 11 அரைசதங்களுடன் 1691 ரன்களையும், 48 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கு ஜிம்பாப்வே அணி தகுதிபெறாத நிலையில், வங்கதேச டி20 தொடர் முடிந்த கையோடு சீன் வில்லியம்ஸ் தனது ஓய்வை அறிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு பல்வேறு கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை