இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஜிம்பாப்வே அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் இலங்கை அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்த நிலையில், இரண்டாவது போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் விதமாக டாப் ஆர்டர் வீரர்கள் பதும் நிஷங்கா 1, குசால் மெண்டிஸ் 4, குசால் பெரேரா ரன்கள் ஏதுமின்றியும், சதீரா சமரவிக்ரமா 16 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த சரித் அசலங்கா - ஏஞ்சலோ மேத்யூஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் விக்கெட் இழப்பையும் தடுத்தனர். 

Advertisement

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். அதன்பின் 69 ரன்கள் எடுத்த நிலையில் சரித் அசலங்கா விக்கெட்டை இழக்க, மறுப்பக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஏஞ்சலோ மேத்யூஸ் 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 66 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களைச் சேர்த்தது. ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி, லுக் ஜோங்வா தலா 2 விக்கெட்டை கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் கமுன்ஹுகாம்வே 12 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த கிரேய்க் எர்வின் - பிரையன் பென்னட் இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கிரேய்க் எர்வின் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அணிக்கு நம்பிக்கைக் கொடுத்தார். 

அதேசமயம் மறுபக்கம் பென்னெட் 25 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் சிக்கந்தர் ரஸா 8 ரன்களுக்கும், சீன் வில்லியம்ஸ் ஒரு ரன்னிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவர்களைத் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கிரேய்க் எர்வின் 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 70 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அணியின் கடைசி நம்பிக்கையாக பார்க்கப்பட்ட ரியான் பார்லும் 13 ரன்களில் நடையைக் கட்டினார். 

இதனால் கடைசி 2 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி வெற்றிக்கு 30 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அப்போது களத்தில் இருந்த லுக் ஜோங்வா 2 பவுண்டரி, 2 சிக்சர் என 25 ரன்களையும், கிளைவ் மடாண்டே 2 சிக்சர்களுடன் 15 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். அதிலும் கடைசி ஓவருக்கு 20 ரன்கள் தேவை என்ற நிலையில் இலங்கை தரப்பில் பந்துவீசிய ஏஞ்சலோ மேத்யூஸ் அந்த ஓவரில் 3 சிச்கர், ஒரு பவுண்டரி உள்பட் 24 ரன்களை வாரி வழங்கினார். 

Advertisement

இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் ஜிம்பாப்வே அணி 1-1 என்ற கணக்கில் சமன்செய்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News