ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஓர் பார்வை!

Updated: Wed, Mar 13 2024 20:01 IST
Image Source: Cricketnmore

ஐபிஎல் என்றழைக்கப்பட்டும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் திருவிழாவின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் தற்போதிலிருந்தே தொடங்கிவிட்டன. அதற்கேற்றவகையில் அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக இத்தொடரை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. 

அந்த வரிசையில் ஐபிஎல் தொடரின் முதல் சீசனிலேயே கோப்பையை வென்று சாதித்துக்காட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அதன்பின் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்கள் எதிர்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பான செயல்பாட்டை ராஜஸ்தான் அணி வெளிப்படுத்தும் நிலையிலும் அந்த அணியாள் பிளே ஆஃப் சுற்றைத் தாண்டி இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் தவித்து வருகிறது. இந்நிலையில் சஞ்சு சாம்சன் தலைமையில் மீண்டும் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.

ராஜஸ்தான் ராயல்ஸ்

கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரின் ஆரம்ப சீசனில் ஷேன் வார்னே தலைமையில் களமிறங்கிய ராஜதஸ்தான் ராயல்ஸ் அணி அதற்கடுத்த சீசன்களில் பிளே ஆஃப் சுற்றிக்கு கூட முன்னேற முடியாமல் திணறியது. அதிலும் குறிப்பாக சூதாட்ட சர்ச்சை காரணமாக 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் விளையாட ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. பின்னர் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்ட பிறகு கடந்த 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி வரை முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் இறுதிப்போட்டியில் குஜராத்  டைட்டன்ஸை வீழ்த்த முடியாமல் கோப்பையை நழுவவிட்டது. இருப்பினும் கடந்தாண்டு ஐபிஎல் தொடரிலும் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை ராஜஸ்தான் அணி நூழிலையில் தவறவிட்டது. இதனால் நடப்பு ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பலம்

நடப்பு சீசன் ஐபிஎல் தொடருக்கான பலமிக்க அணிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அந்த அணியின் பேட்டிங் வரிசையில் சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிம்ரான் ஹெட்மையர், டொனவன் ஃபெரீரா, ரியான் பராக் என உள்நாட்டு, வெளிநாட்டு பேட்டர்கள் இருப்பது அணிக்கு மிகப்பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. இவர்களைத் தவிர்த்து ரோவ்மன் பாவெல், டாம் கொஹ்லர் காட்மோர் போன்ற வீரர்களையும் சமீபத்திய வீரர்கள் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது. 

அணியின் பந்துவீச்சை எடுத்துக்கொண்டால் ரவிச்சந்திரன் அஸ்வின், ஆடம் ஸாம்பா, யுஸ்வேந்திர சஹால் என உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்துவீச்சு கூட்டணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் உள்ளது. அவர்களுடன் டிரெண்ட் போல்ட், நந்த்ரே பர்கர், சந்தீப் சர்மா, ஆவெஷ் கான், நவ்தீப் சைனி, குல்தீப் சென் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பது அணியின் பலத்தை மேலும் கூட்டியுள்ளது. இவர்களில் டிரெண்ட் போல்ட் மற்றும் சந்தீப் சர்மா ஆகியோர் கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் சமீப காலமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ரியான் பராக் ஆகியோர் சமீப காலங்களில் பேட்டிங்கில் அசத்தி வருவது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. அதிலும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியுள்ளதால், நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் எவ்வாறு செயல்படுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இவர்களுடன் ஜோஸ் பட்லர், டாம் கொஹ்லர் காட்மோர், ஷிம்ரான் ஹெட்மையர் ஆகியோரும் ஃபார்முக்கு திரும்பினால் நிச்சயம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிரணிக்கு சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பலவீனம்

இந்தண்டு ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் அணி பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்பட்டாலும், அணியில் பெரும்பாலான நட்சத்திர வீரர்கள் இருப்பதால் இதில் யார் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ஏனெனில் ஒவ்வொரு ஐபிஎல் அணியிலும் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே இடம்பெற முடியும் என்பதால் இது ராஜஸ்தான் அணியின் பிளேயிங் லெவனில் பெரும் குழப்பத்தை வரவழைக்கும் என்பது அந்த அணியின் பலவீனங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

ஏனெனில் ஆடம் ஸாம்பா, டோனவன் ஃபெரீரா போன்ற வீரர்களால் கடந்த சீசனில் பெரிதளவில் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது. அதிலும் இந்த சீசனில் கூடுதலாக நந்த்ரே பர்க்கர், ரோவ்மன் பாவெல், டாம் கொஹ்லர்ட் காட்மோர் ஆகியோரும் அணியில் இருப்பதால் இவர்களை சுழற்ச்சி முறையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அப்படி செய்யும் பட்சத்தில் பெரும்பாலான வீரர்கள் தங்களது திறனை வெளிப்படுத்த முடியாமலும் போகலாம் என்பது நிதர்னம். 

அவர்களைத் தாண்டி, அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் முக்கியமானவராக பார்க்கப்பட்ட பிரஷித் கிருஷ்ணா காயம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளது ராஜஸ்தான் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும். இதனால் அவருக்கு மாற்று வீரரைத் தேட வேண்டிய கட்டாயத்திலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தள்ளபட்டுள்ளது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் வரலாறு

  • 2008 - சாம்பியன்
  • 2009 - லீக் சுற்று 
  • 2010 - லீக் சுற்று
  • 2011 - லீக் சுற்று
  • 2012 - லீக் சுற்று
  • 2013 - பிளே ஆஃப் சுற்று
  • 2014 - லீக் சுற்று
  • 2015 - பிளே ஆஃப் சுற்று
  • 2016 - இடைநிக்கம்
  • 2017 - இடைநிக்கம்
  • 2018 - பிளே ஆஃப் சுற்று
  • 2019 - லீக் சுற்று 
  • 2020 - லீக் சுற்று
  • 2021 - லீக் சுற்று
  • 2022 - இரண்டாம் இடம் (ரன்னர் அப்)
  • 2023 - லீக் சுற்று

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஷிம்ரான் ஹெட்மையர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல், ரியான் பராக், டொனோவன் ஃபெரீரா, குணால் ரத்தோர், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் சென், நவ்தீப் சைனி, பிரசித் கிருஷ்ணா, சந்தீப் சர்மா, டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், ஆடம் ஸாம்பா, அவேஷ் கான், ரோவ்மேன் பவல், ஷுபம் துபே, டாம் கோஹ்லர்-காட்மோர், அபித் முஷ்டாக், நந்த்ரே பர்கர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டி அட்டவணை

இந்தியாவில் நடப்பு ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் இத்தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடுவது தாமதம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து இத்தொடரின் முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையை மட்டும் பிசிசிஐ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 24 - ராஜ்ஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ஜெய்ப்பூர்
மார்ச் 28 - ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஜெய்ப்பூர்
ஏப்ரல் 01 - மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை
ஏப்ரல் 01 - ராஜ்ஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஜெய்ப்பூர்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை