#Onthisday: டி20 உலகக்கோப்பை 2007: ரிவைண்ட்!

Updated: Fri, Sep 24 2021 11:54 IST
Image Source: Google

ஐபிஎல், சிபிஎல், பிக் பேஷ், பிபிஎல், பாகிஸ்தான் பிரீமியர் லீக் என பல்வேறு லீக் போட்டிகளுக்கும் தொடக்கம் இந்தப் போட்டி தான். இந்தப் போட்டியில் இந்திய அணி அடைந்த வெற்றி, உலக அளவில் கிரிக்கெட்டின் எதிர்காலத்தை மாற்றி அமைத்துள்ளது.

2007ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடந்த உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி லீக் தொடரோடு வெளியேறியது. இதனால் கொதிப்படைந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், வீரர்களின் வீடுகளுக்கு முன்பாக தாக்குதல்களில் ஈடுபட்டனர்.

அந்தத் தோல்விக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியின் மனநிலையும் சற்று மாறிதான் போயிருந்தது. அந்த உலகக்கோப்பை தோல்வியை அடுத்து, டி20 கிரிக்கெட் இளைஞர்களுக்கானது என்று மூத்த வீரர்களான சச்சின், கங்குலி, டிராவிட் ஆகியோர் விலகிக் கொண்டனர்.

அதற்கு முன்னதாக இரண்டு டி20 போட்டிகளில் தான் இந்திய கிரிக்கெட் அணி ஆடியுள்ளது. எனவே அந்தத் தொடரில் இளம் வீரரான தோனி கேப்டனாக்கப்பட்டார். முழுக்க முழுக்க இளம் படையுடன் தென் ஆப்பிரிக்கா கிளம்பிய இந்திய அணி மீது பெரிதாக எவருக்கும் நம்பிக்கை இல்லை. அதுமட்டுமல்ல, அந்த அணிக்கு பயிற்சியாளரும் இல்லை.

அப்போது அனைத்து பத்திரிகைகளும் ஆஸ்திரேலியா அல்லது தென் ஆப்பிரிக்கா தான் உலகக்கோப்பையை வெல்லும் என எழுதினர். ஆனால் அந்த இந்திய இளம்படை பலருக்கும் பதில் கூற காத்துக் கொண்டிருந்தது.

ஸ்காட்லாந்து உடனான முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட, அடுத்த நாள் பாகிஸ்தான் உடன் இந்தியா மோதியது. இந்த இடத்திலிருந்துதான் டி20 உலகக்கோப்பைக்கான தீப்பொறி இந்தியாவில் முதலில் பற்றியது.

பாகிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா என அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் அந்தப் போட்டி தான் உலகக்கோப்பைத் தொடரின் ஹைலைட். ஒவ்வொரு ஓவரிலும் கிரிக்கெட்டின் பரபரப்பு எகிறியது. பத்திரிகைகள் எழுதியதற்கு நேர்மாறாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய இளம்படை இறுதிக்கு முன்னேறியது.

மறுபுறம், நியூசிலாந்தை வீழ்த்தி பங்காளிகளான பாகிஸ்தான் இறுதிக்கு முன்னேறினர். இந்தியா - பாகிஸ்தான் அணிகள் டி20 உலகக்கோப்பை இறுதியில் மோதியதால் உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு அதிகரித்தது. 2007ஆம் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் முதல் சுற்றோடு வெளியேறிய இரு அணிகளும், அடுத்த சில மாதங்களில் நடந்த டி20 உலகக்கோப்பைத் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இன்று வரை ஆச்சரியம் தான்.

முதல் இன்னிங்ஸில் கம்பீர் மற்றும் ரோஹித் ஷர்மாவின் பொறுப்பான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 157 ரன்களை இந்திய அணி எடுத்தது. பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை சீரான ஓவர்கள் இடைவெளியில் இந்திய வீரர்கள் விக்கெட் வீழ்த்திக் கொண்டே வந்தனர். ஆனால் அந்த அணியின் மிஸ்பா உல் ஹக் மட்டுமே நிலைத்து நின்று இறுதிவரை ஆட்டத்தை எடுத்துச் சென்றார்.

கடந்த சில ஆண்டுகளாக தோனி செய்துகொண்டிருந்த சாகசத்தை 2007ஆம் ஆண்டில் மிஸ்பா உல் ஹக் உலக மக்களின் கண் முன்னால் செய்து காட்டினார். கடைசி ஓவரில் பாகிஸ்தான் 13 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை வந்தது. மிஸ்பா ஸ்ட்ரைக்கில் இருக்கிறார்.

இந்திய அணியில் ஹர்பஜன் சிங் அல்லது ஜோகிந்தர் ஷர்மா ஆகிய இருவரில் யார் பந்துவீசப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தபோது, அனுபவ வீரரான ஹர்பஜன் சிங்கிடம் தான் தோனி பந்தைக் கொடுப்பார் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் தோனியோ, ஜோகிந்தர் ஷர்மாவிடம் பந்தைக் கொடுத்தார்.

அந்த முடிவு தான் இந்திய கிரிக்கெட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்து இன்றளவும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. 17ஆவது ஓவரை வீசிய ஹர்பஜன் சிங் ஓவரில் மிஸ்பா உல் ஹக் மூன்று சிக்சர்களைத் தொடர்ச்சியாக அடித்திருந்தார்.

கடைசி ஓவரை ஜோகிந்தர் ஷர்மாவிடம் கொடுத்த தோனி, ”எந்த பயமும் இல்லாமல் பந்துவீசு. முடிவினைப் பற்றி கவலைப்பட வேண்டாம்” என்று தைரியம் கொடுக்க, இரண்டாவது பந்து சிக்சருக்கு சென்றது.

ஆனால் இந்திய அணி மனம் தளரவில்லை. என்ன ஷாட் அடிக்கப் போகிறார் என்பதை ஊகித்து தோனி ஸ்ரீசாந்தை ஃபீல்டிங் நிற்க வைக்க, மிஸ்பாவை ட்ரேப் செய்து விக்கெட் வீழ்த்தினார்கள்.

''in the air... Sreesanth takes it. india won'' என்ற வார்த்தைகளோடு இன்று அந்த வீடியோவைப் பார்த்தாலும் காண்பவர்களுக்கு நிச்சயம் புல்லரிக்கும். பெரிய எதிர்பார்ப்போ, ஆதரவோ எதுவும் இல்லாமல் சென்ற அணி, டி20 உலகக்கோப்பையின் அறிமுகத் தொடரைக் கைப்பற்றி சாதனைப் படைத்தது.

அந்தத் தொடரில் ஆடிய வீரர்களுக்கு பெரும்பாலும் அப்போது குறைவான ரசிகர்கள் தான் இருந்தனர். அந்தத் தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு வீரர் எழுச்சிப் பெற்று வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். அட்டகாசமாக இந்திய அணி வெற்றி பெற்றது.

அந்தத் தொடரில் வெற்றிபெற்றவுடன் தோனி கூறிய வார்த்தைகள் இவை: ’It will be huge in India’. ஆம், எதிர்கால கிரிக்கெட் ரசிகர்கள் டி20 போட்டிகளை எப்படி பார்க்கப் போகிறார்கள் என்பதை அப்போதே கூறியிருந்தார் தோனி.

ஒருவேளை அந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்திருந்தால் டெஸ்ட் கிரிக்கெட்டைப் போன்று ஒரு வகை கிரிக்கெட் போட்டியாகவே இந்திய ரசிகர்கள் இதைக் கடந்திருப்பார்கள். ஆனால் அந்த ஒரு வெற்றி இந்திய கிரிக்கெட்டிற்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் புத்துணர்ச்சியை கொடுத்தது.

அந்த எதிர்பாரா வெற்றிக்குப் பின் கோப்பையை வென்றுவிட்டு மும்பை திரும்பிய வீரர்களுக்கு, மும்பை கிரிக்கெட் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை வரலாற்றில் யாரும் மறக்க மாட்டார்கள்.

கோப்பையை வென்றுவிட்டு மைதானத்திலேயே ஜெர்சியைக் கழற்றிவிட்டு தோனி நடந்துவந்த வீடியோக்கள் அளித்த உற்சாகம், கங்குலிக்கு பிறகு இந்திய கிரிக்கெட்டிற்கு தன்னிகரில்லா கேப்டன் கிடைத்துவிட்டான் என்பதை பறைசாற்றியது.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

ஒரு வெற்றியால் எல்லாம் மாறிவிடுமா என்று கேட்பவர்களுக்கு, அந்த ஒரு வெற்றிதான், இந்த 14 ஆண்டுகளில் இந்திய அணி படைத்த சாதனைகளுக்கு அடித்தளம். நம்பிக்கையில்லா அணியைக் கொண்டு ரசிகர்களோடு வீரர்களுக்கும் நம்பிக்கை வரவைத்த போட்டி நடைபெற்று இன்றோடு 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை