கிரிக்கெட் வரலாறு: டி20 கிரிக்கெட் உருவான கதை..! 

Updated: Sat, May 29 2021 09:47 IST
Story of the first T20 match of cricket history (Image Source: Google)

கிரிக்கெட்... இந்த பெயரைக் கேட்டாலே இளைஞர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைத்துவிடும். அதிலும் இந்தியாவில் இப்பெயருக்கு ரஜினி கூறுவது போல ‘ஐந்து வயது சிறுவன் முதல் ஐம்பவது வயது பெரியவர் வரை யாரைக்கேட்டாலும் தெரியும்’  என்ற அளவிற்கு மவுசு நிறைந்த ஒரு விளையாட்டு. 

இங்கிலாந்து மக்கள் மட்டுமே விளையாடி வந்த இந்த கிரிக்கெட்டானது பின்னர் உலக நாடுகளும் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும் விளையாட்டாக இன்று உருமாறியுள்ளது என்பதே நிதர்சனம். 

ஆரம்ப காலங்களில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மட்டுமே கோலோச்சி இருந்த கிரிக்கெட் விளையாட்டு இன்று 28க்கும் மேற்பட்ட அங்கீகாரம் பெற்ற நாடுகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகின்றன. 

அதிலும் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவின் பங்களிப்பானது கடந்த 20 ஆண்டுகளில் புது சரித்திரத்தைப் படைத்துள்ளது என்று தான் கூற வேண்டும். டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து ஃபார்மேட்களில் இந்திய அணி தனிக்காட்டு ராஜாவாக உருமாறியுள்ளது. 

இதில் சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருப்பது டி20 கிரிக்கெட் போட்டிகள் தான். இப்படி பெருமளவில் ரசிகர்கள்  பட்டாளத்தை கொண்டுள்ள டி20 கிரிக்கெட் போட்டிகள் எவ்வாறு உருவானது என்பதை இப்பதிவில் காண்போம்...

முதல் டி20 போட்டி

கடந்த 2000ஆம் ஆண்டு வரை கிரிக்கெட் என்றால் அது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியாக மட்டுமே அனைவருக்கும் தெரியும். மேலும் அப்போதிருந்த வீரர்கள் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் தங்களது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். 

நாளடைவில் இப்போட்டிகளுக்கு எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் குறையத் தொடங்கின. மேலும் கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளுக்கான வரவேற்பு ரசிகர்கள் மத்தில் குறையத் தொடங்கியது. 

இதனைக் கவனித்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இளைஞர்களை கவரும் வகையில் புதிய வடிவிலான கிரிக்கெட் போட்டிகளை உருவாக்க திட்டமிட்டது. அதன் தொடர்ச்சியாக தான் கவுண்டி அணிகளைக் கொண்டு டி20 கிரிக்கெட் தொடர் ஒன்றை நடத்த திட்டமிட்டது. இதற்கான அறிவிப்பை அப்போதைய கவுண்டி சேர்மனாக இருந்த ஸ்டூவர்ட் ராபர்ட்சன் 2001 ஆம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் முன்வைத்தார்.

அதன்பின் 2003ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி கவுண்டி அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நடத்தியது. அப்போட்டிக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நினைத்தது போலவே ரசிகர்களின் வருகையும் அதிகரித்தது. 

அதன்பின் 2004ஆம் ஆண்டு இங்கிலாந்து - நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையே முதல் சர்வதேச டி20 போட்டியை நடத்தை ஐசிசி அனுமதி வழங்கியிருந்தது. அப்போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்த, இப்போட்டி குறித்த தகவல் காட்டுத்தீ போன்று சர்வதேச கிரிக்கெட்டை திரும்பி பார்க்க வைத்தது. 

அதுநாள் வரை ஓவருக்கு ஒரு ரன், இரண்டு ரன் என போட்டியை கண்டு வந்த ரசிகர்களுக்கு, ஓரு ஓவரில் இரண்டு சிக்கர், பவுண்டரி என விருந்து படைப்பதாக டி20 கிரிக்கெட் சர்வதேச அரங்கில் தனது கால் தடத்தைப் பதித்தது. 

சர்வதேச டி20 கிரிக்கெட்

அதன்பின் ஆகஸ்ட் 4, 2004 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் முதல் சர்வதேச டி20 போட்டியை விளையாடின. இப்போட்டியில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் அதிரடியாக விளையாடி 90 ரன்களை குவித்து அசத்தினார்.

அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 214 ரன்களை குவித்தது. ஒருநாள் போட்டிகளிலேயே 150 ரன்களை தாண்ட சிரமப்பட்ட வீரர்கள், வெறும் 20 ஓவரில் 200 ரன்களை குவித்தது ரசிகர்களின் எதிர்பார்ப்பை டி20 கிரிக்கெட்டின் பக்கம் திருப்பியது. 

அப்போட்டியில் நியூசிலாந்து அணியும் இறுதிவரை போராடியது. ஆனால் அந்த அணியால் 170 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்திருந்தது. இதனால் அப்போதைய கிரிக்கெட் வல்லரசான ஆஸ்திரேலிய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் சர்வதேச டி20 போட்டியில் வெற்றியை ருசித்திருந்தது. 

இந்திய அணியின் முதல் டி20 போட்டி

ஆனால் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு அப்போதிருந்த சச்சின், டிராவிட், கங்குலி உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் பெரும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். ஏனெனில் டி20 கிரிக்கெட் போட்டிகளினால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இல்லாமல் ஆகிவிடும் என்பதால், டி20 கிரிக்கெட்டை இந்திய அணி எதிர்த்தது. 

அப்படி இருந்தும் 2006ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி இந்திய அணி, தென் ஆப்பிரிக்க அணியுடன் தனது முதல் சர்வதேச டி20 போட்டியை விளையாடியது. இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக விரேந்திர சேவாக் நியமிக்கப்பட்டிருந்தார். 

இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களைச் சேர்த்திருந்தது. 

பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விரேந்திர சேவாக் 34 ரன்களிலும், சச்சின் டெண்டுல்கர் 10 ரன்களிலும், தினேஷ் மொங்கியா 38 ரன்களிலும், தோனி ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். 

அதன்பின் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி 31 ரன்களை குவித்ததோடு இந்திய அணியை வெற்றி பெறச் செய்ததார். இதன்மூலம் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் அந்த வருடத்தில் நடத்தப்பட்ட ஒரே சர்வதேச டி20 போட்டியாகவும் இது அமைந்திருந்தது. 

முதல் டி20 உலகக்கோப்பை

அதனைத் தொடர்ந்து 2007ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில், உலக கோப்பை தொடரை நடத்த திட்டமிட்டது.

அதன்படி 2007ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் முதல் டி20 உலகக்கோப்பை தொடரை ஐசிசி நடத்தியது. இதில் ஆச்சரியமளிக்கும் வகையில், அதுநாள் வரை ஒரே ஒரு சர்வதேச டி20 போட்டியில் மட்டுமே விளையாடி இருந்த இந்திய அணி டி20 உலக கோப்பையை கைப்பற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இந்திய அணிக்கு மகேந்திர சிங் தோனி என்ற புதிய கேப்டனையும் அறிமுகப்படுத்தி, இந்திய கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றது. 

இப்படி ஒரு உள்ளூர் போட்டியாக நடத்தப்பட்ட டி20 கிரிக்கெட் இன்று சர்வதேச அளவில் அதிக ரசிகர்களால் விரும்பப்படும் விளையாட்டாக உருவெடுத்துள்ளது. அதற்கு ஐபிஎல், பிக் பேஷ் போன்ற உள்ளூர் தொடர்களும் முக்கிய பங்கை வகித்துள்ளன என்பது மறுக்கப்படாத உண்மை...! 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை