PAK vs WI, 1st Test: பாகிஸ்தான் சுழலில் வீழ்ந்தது வெஸ்ட் இண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முயிந்துள்ளது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸை வென்று பேட்டிங் செய்வதாக அறிவித்து விண்டீஸை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த சௌத் ஷகீல் மற்றும் முகமது ரிஸ்வான் இணை அரைசதம் கடந்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார். அதன்பின் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சௌத் சகீல் 6 பவுண்டரிகளுடன் 86 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, முகமது ரிஸ்வான் 71 ரன்களை சேர்த்த கையோடு ஆட்டமிழந்தார். இதனால் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜெய்டன் சீல்ஸ் மற்றும் ஜொமல் வாரிக்கன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Trending
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது தொடக்க முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அந்த அணியில் அதிகபட்சமாகவே ஜொமல் வாரிக்கன் 31 ரன்களையும், ஜெய்டன் சீல்ஸ் 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 25.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணி தரப்பில் நொமன் அலி 5 விக்கெட்டுகளையும், சஜித் கான் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
பின்னர் 97 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் ஷான் மசூத் - முகமது ஹுரைரா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், முகமது ஹுரைரா 29 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய பாபர் அசாம் 5 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷான் மசூத் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
பின்னர் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 52 ரன்களைச் சேர்த்த கையோடு ஷான் மசூத் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை காம்ரன் குலாம் 9 ரன்களுடனும், சௌத் ஷகீல் 2 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடங்கினர். இதில் காம்ரன் குலாம் 27 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
விண்டீஸ் தரப்பில் ஜொமல் வாரிக்கன் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 250 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி இலக்கை நோக்கி விளையாடிய அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறி அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய அலிக் அதனாஸ் ஒருபக்கம் நிதானமாக விளையாடி அரைசதம் கடந்து அசத்திய நிலையில், மறுபக்கம் களமிறங்கிய வீரர்களும் பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறினர்.
Also Read: Funding To Save Test Cricket
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்றாம் நாளிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் சஜித் கான் 5 விக்கெட்டுகளையும், அப்ரார் அஹ்மத் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றது. இப்போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் பந்துவீச்சில் அசத்தில் சஜித் கான் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Win Big, Make Your Cricket Tales Now