2nd Test, Day 2: வலுவான இலக்கை நிர்ணயித்த விண்டீஸ்; தடுமாற்றத்தில் பாகிஸ்தான்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்களைச் சேர்த்துள்ளது.
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டிஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய விண்டீஸ் அணி பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தன்ர்.
அந்த அணியின் டார் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 54 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் களமிறங்கிய கீமார் ரோச் 25 ரன்களில் விக்கெட்டை இழக்க, அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய குடகேஷ் மோட்டியும் அரைசதம் கடந்து அசத்திய கையோடு 55 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில்163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணி தரப்பில் நோமன் அலி ஹாட்ரிக் விக்கெட்டுகள் உள்பட 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Trending
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணியும் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் முகமது ஹுரைரா 9 ரன்னிலும், அடுத்து வந்த பாபர் ஆசாம் ஒரு ரன்னிலும், கேப்டன் ஷான் மசூத் 15 ரன்னிலும், காம்ரன் குலாம் 16 ரன்னிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சௌத் சகீல் 32 ரன்னிலும், முகமது ரிஸ்வான் 49 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.
பின்னர் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற அந்த அணி 154 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜொமல் வாரிக்கன் 4 விக்கெட்டுகளையும், குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர் 9 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் மைக்கல் லுயிஸ் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் பிராத்வைட் - அமீர் ஜாங்கூ பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை இயர்த்தினர். இதில் பிராத்வைட் அரைசதம் கடந்து அசத்தினார்.
பின்னர் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 52 ரன்கள் எடுத்திருந்த பிராத்வைட் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து அமீர் ஜாங்கூவும் 30 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதனையத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் டெவின் இம்ளச் 35 ரன்களையும், கெவின் சின்க்ளர் 28 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனல் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 244 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, பாகிஸ்தானுக்கு 254 ரன்களை இலக்காக நிர்ணயித்து. பாகிஸ்தான் தரப்பில் சஜித் கான், நொமன் அலி ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் மற்றும் முஹ்மது ஹுரைரா ஆகியோர் தலா 2 ரன்களில் விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த பாபர் ஆசாம் - காம்ரன் குலாம் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசாம் 31 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 19 ரன்களில் காம்ரன் குலாமும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
Also Read: Funding To Save Test Cricket
இதனால் பாகிஸ்தான் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் சௌத் சகீல் 13 ரன்களுடனும், காஷிஃப் அலி ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். விண்டீஸ் தரப்பில் கெவின் சின்க்ளேர் 2 விக்கெட்டுகளையும், குடகேஷ் மோட்டி, ஜொமல் வாரிக்கன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now