
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்டதொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளுமே தலா ஒரு வெற்றியை பெற்ற நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது.
முதல் 2 நாள் ஆட்டங்கள் வெவ்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட நிலையில், 3ஆம் நாள் தான் போட்டியே தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க வீரர்கள், இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர் ஆலி ராபின்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராடிடம் சரணடைந்தனர். ஆலி ராபின்சன் அபாரமாக பந்துவீசி அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்த, பிராட் 4 விக்கெட்டுகளை வீழ்த்த முதல் இன்னிங்ஸில் வெறும் 118 ரன்களுக்கு சுருண்டது தென்னாப்பிரிக்க அணி. அந்த அணியில் அதிகபட்சமாகவே மார்கோ யான்சென் தான் 30 ரன்கள் அடித்தார்.