ஐபிஎல் 2022: எங்களது தோல்விக்கு இதுவே காரணம் - மயங்க் அகர்வால்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
15ஆவது ஐபிஎல் தொடரின் 32ஆவது லீக் போட்டியில் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், மாயன்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, டெல்லி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததால், 115 ரன்கள் மட்டுமே எடுத்த பஞ்சாப் கிங்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டெல்லி அணியில் ஜித்தேஷ் சர்மா (32), மாயன்க் அகர்வால் (24), ராகுல் சாஹர் (12) மற்றும் சாருக் கான் (12) ஆகியோரை தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னை கூட தாண்டவில்லை.
Trending
டெல்லி அணியில் அதிகபட்சமாக கலீல் அஹமத், லலித் யாதவ், அக்ஷர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ப்ரித்வி ஷா 41 ரன்களும், டேவிட் வார்னர் 30 பந்துகளில் 60* ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம், 10.3 ஓவரிலேயே இலக்கை இலகுவாக எட்டிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தநிலையில், இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் படுதோல்வி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டனான மாயன்க் அகர்வல், இந்த தோல்வியை மறந்துவிட்டு அடுத்தடுத்த போட்டிகளில் கவனம் செலுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாயன்க் அகர்வால் பேசுகையில், “இந்த நாள் எங்களுக்கு மோசமானதாக அமைந்துவிட்டது. இந்த நாளையும், இந்த தோல்வியையும் மறந்துவிட்டு அடுத்தடுத்த போட்டிகளில் கவனம் செலுத்துவதே சரியானதாக இருக்கும். பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் நாங்கள் சொதப்பிவிட்டோம். இந்த போட்டியில் நாங்கள் விக்கெட்டுகளை விரைவாக இழந்துவிட்டோம், இதற்கான காரணத்தை கண்டறிந்து அதை நிச்சயம் சரி செய்தாக வேண்டும்.
இந்த தோல்வியை நினைத்து கொண்டே இருப்பதால் எந்த பலனும் இல்லை, எதிர்மறையான எண்ணங்களே உருவாகும், எனவே இந்த தோல்வியை மறந்துவிட்டு அடுத்த போட்டிகளில் கவனம் செலுத்துவோம். இந்த ஆடுகளத்தில் 180 ரன்களாவது அடித்திருக்க வேண்டும். அதே போல் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நான் முன்கூட்டியே ஒரு சில ஓவர்கள் கொடுத்திருக்க வேண்டும், ஆனால் நான் அதை செய்ய தவறிவிட்டேன்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now