SA A vs IND A: ஈஸ்வரன் அபார சதம்; வலிமையான நிலையில் இந்தியா ஏ!
தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய ஏ அணி தனது முதல் இன்னிங்ஸில் 307 ரன்களைச் சேர்த்துள்ளது.
பிரியங்க் பன்சால் தலைமையிலான இந்தியா ஏ அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 4 நாட்கள் ஆடும் டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா ஏ அணியின் தொடக்க வீரர் எர்வீ டக் அவுட்டானார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான பீட்டர் மலான் அபாரமாக ஆடி சதமடித்தார். 163 ரன்களை குவித்தார் பீட்டர் மலான். டோனி டி ஜார்ஜியும் சிறப்பாக ஆடி சதமடித்தார். ஜார்ஜி 117 ரன்களை குவித்தார். அதன்பின்னரும் பின்வரிசையில் ஜே ஸ்மித் 52 ரன்களும், கேஷில் 72 ரன்களும், ஜார்ஜ் லிண்டே 51 ரன்களும் அடித்தனர். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் தென்ஆப்பிரிக்கா ஏ அணி 509 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது.
Trending
இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடி வரும் இந்தியா ஏ அணியின் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் ப்ரியன்க் பன்சால் ஆகிய இருவருமே சிறப்பாக ஆடினர். அதிரடியாக ஆடிய பிரித்வி ஷா 45 பந்தில் 48 ரன்கள் அடித்து அரைசதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ப்ரியன்க் பன்சாலுடன் ஜோடி சேர்ந்த அபிமன்யூ ஈஸ்வரன், அவருடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சிறப்பாக விளையாடிய கேப்டன் பிரியன்க் பன்சால் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்து 4 ரன்னில் சதத்தை தவறவிட்டார். ஹனுமா விஹாரி 25 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஆனால் அபிமன்யூ ஈஸ்வரன் மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி சதமடித்தார். ஆனால் அதன்பின்னர் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல், சதமடித்த மாத்திரத்தில் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதனால் 3ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா ஏ அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் அடித்துள்ளது. பாபா அபரஜித்தும், உபேந்திரா யாதவும் களத்தில் உள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now