
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரதான வீரர்களில் ஒருவரான தீபக் சஹார் காயமுற்றிருக்கிறார் எனும் செய்தி அனைவரும் அறிந்ததே. இந்த காயம் காரணமாக தீபக் சஹார் முதல் பாதி ஐ.பி.எல் தொடரில் ஆடுவதென்பது கேள்விக்குறியாகியுள்ளது. தீபக் சஹார் இல்லாதபட்சத்தில் அவருடைய இடத்தை நிரப்பும் வகையில் சென்னை அணியில் இருக்கும் மற்ற வீரர்கள் யார் யார் என்பதை குறித்த ஓர் பார்வையை இப்பதியில் காண்போம்.
கடந்த நான்கு சீசன்களில் சிஎஸ்கே 2 முறை சாம்பியன் ஆகியிருக்கிறது. ஒரு முறை ரன்னர் அப் ஆகியிருக்கிறது. சிஎஸ்கேவின் இந்த அசத்தலான பெர்ஃபார்மென்ஸுக்கு காரணமாக அமைந்தவர்களின் பட்டியலில் தீபக் சஹாருக்கு முக்கிய இடமுண்டு. கடந்த 4 சீசன்களில் மட்டும் சிஎஸ்கே அணிக்காக 58 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.
தீபக் சஹார் ஒரு பவர்ப்ளே ஸ்பெசலிஸ்ட். அவருடைய 4 ஓவர்களில் 3 ஓவர்களை பவர்ப்ளேயிலே வீசிவிடுவார். புதிய பந்தில் நன்றாக பந்தை ஸ்விங் செய்து எதிரணி ஓப்பனர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி சிஎஸ்கேக்கு நல்ல தொடக்கத்தை பெற்றுக் கொடுப்பார். கடந்த 4 சீசன்களாக இந்த வேலையை சீராக செய்து வந்தார். இதனாலயே மெகா ஏலத்தில் தீபக் சஹாருக்கு 14 கோடி ரூபாயை கொட்டிக் கொடுத்து சிஎஸ்கே மீண்டும் அவரை தக்கவைத்துக் கொண்டது.