
சிஎஸ்கே அணிக்கு இந்த ஆண்டு சீசன் மோசமாகஅமைந்துவிட்டது. கேப்டன் மாற்றம் செய்யப்பட்டு ரவிந்திர ஜடேஜா தலைமையில் சென்று பல போட்டிகளில் தோல்வி அடைந்தது. இதனால், தோனி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், ரவிந்திர ஜடேஜாவுக்கும், சிஎஸ்கேநிர்வாகத்துக்கும் இடையே ஏதோ மோதல் ஏற்பட ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக காயத்தை காரணம் காட்டி சென்றுவிட்டார்
இதற்கிடையே கடந்த 2018ம் ஆண்டிலிருந்து சிஎஸ்கே அணிக்கு முக்கியத் தூணாக இருந்துவரும் பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு இன்று ட்விட்டரில் திடீரென இந்த ஆண்டு ஐபிஎல் சீசன்தான் கடைசி, அதன்பின் விளையாடமாட்டேன், ஓய்வு பெறப் போகிறேன் என்று ட்விட் செய்து, சிறது நேரத்தில் அந்த ட்வீ்ட்டை நீக்கினார்.
அதில், “இதுதான் என்னுடைய கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். இரு பெரிய அணிகளில் நான் இடம் பெற்று 13 ஆண்டுகள் விளையாடியது அற்புதமானது. அற்புதமான கிரிக்கெட் பயணத்தை அமைத்துக் கொடுத்த மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணிக்கு உண்மையாகவே நன்றி தெரிவிக்கிறேன்” எனத் தெரிவித்தார். அம்பதி ராயுடுவின் ட்விட் கிரிக்கெட் உலகிலும், சமூக ஊடகங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.