
நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு ஒரேயொரு ஒருநாள் போட்டியில் மட்டும் ஆட கண் துடைப்புக்காக வாய்ப்பளித்துவிட்டு அவரை மற்ற போட்டிகளில் புறக்கணித்தது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சஞ்சு சாம்சன் இயல்பான திறமைசாலி. பெரிய ஷாட்டுகளை அலட்டலின்றி அசால்ட்டாக அடிக்கக்கூடியவர். அதிரடியாக ஆடக்கூடிய சாம்சன், அசாத்தியமான இன்னிங்ஸ்களை ஆடி அசத்தும் வீரர். இந்திய அணியில் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
அவர் திறமையான பேட்ஸ்மேன் தான் என்றாலும், நிலையான, சீரான ஆட்டத்தை ஆடாததுதான் அவரது பெரிய பிரச்னை. அவருக்கு ஒன்றிரண்டு போட்டிகளில் வாய்ப்பளித்துவிட்டு இந்திய அணி நிர்வாகம் மீண்டும் ஒதுக்கிவிடுகிறது. இதுதான் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்துவருகிறது.
2015ம் ஆண்டு இந்திய டி20 அணியில் அறிமுகமான சஞ்சு சாம்சன் திறமையான வீரராக இருந்தும் கூட, அவருக்கு இன்னும் இந்திய அணியில் அவருக்கு நிரந்தர இடம் கிடைக்கவில்லை. தொடர் வாய்ப்புகள் வழங்கப்பட்டால்தானே, அவரால் நிரந்தர இடத்தை பிடிக்க முடியும். தோனி, கோலி, ரோஹித் மாதிரியான நிரந்தர கேப்டன்கள் மட்டுமல்லாது தவான், ராகுல், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா என பொறுப்பு கேப்டன்களின் கேப்டன்சியிலும் சஞ்சு சாம்சன் புறக்கணிக்கப்படுகிறார். கேப்டன்கள் யாராக இருந்தாலும் சாம்சன் புறக்கணிக்கப்படுவது மட்டும் மாறுவதில்லை.