
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்து த்ரில் வெற்றிகளை சுவைத்த இந்தியா 2 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் ஷிகர் தவான் தலைமையில் பெரும்பாலும் இளம் வீரர்களுடன் களமிறங்கி சாதித்துள்ள இந்தியா 2006க்குப்பின் ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசிடம் தோல்வியே அடையாமல் தொடர்ச்சியாக 12 தொடர்களை வென்று புதிய உலக சாதனையும் படைத்தது.
இதை தொடர்ந்து இத்தொடரின் கடைசி சம்பிரதாய போட்டி ஜூலை 27ஆம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடந்த 2ஆவது போட்டியில் கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை வாரி வழங்கும் பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டு ஆவேஷ் கானுக்கு அறிமுகப் போட்டியில் களமிறங்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவரும் ரன்களை வாரி வழங்கும் வள்ளலாக வெறும் 6 ஓவரில் 54 ரன்களை 9.00 என்ற மோசமான எக்கனாமியில் பந்துவீசி வாய்பளித்த அணி நிர்வாகத்துக்கு ஏமாற்றத்தை பரிசளித்தார்.
ஆனால் அவருக்கு பதில் பஞ்சாப் இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷிதீப் சிங் களமிறங்குவார் என்று தான் அனைவரும் எதிர்பார்த்தனர். ஏனெனில் கடந்த சில வருடங்களாகவே ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் துல்லியமாக பந்துவீசி குறைவான ரன்களைக் கொடுத்து விக்கெட்டுகள் எடுக்கும் பவுலராக பல முன்னாள் வீரர்களின் பாராட்டுக்களை அள்ளி வரும் அவர் கடைசிகட்ட ஓவர்களில் ரபாடா போன்ற வெளிநாட்டு தரமான பவுலர்களை காட்டிலும் அற்புதமாக பந்து வீசுகிறார். அதனால் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் தேர்வு செய்யப்பட்ட அவர் அயர்லாந்து டி20 தொடர் வரை பெஞ்சிலேயே அமர்ந்திருந்தார்.