
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தங்கள் முதல் போட்டியில் பாகிஸ்தானை கடைசி பந்தில் த்ரில் வெற்றிபெற்று அசத்தியது. அனில் கும்ப்ளே பயிற்சியின் கீழ்தான் அர்ஷ்தீப் சிங் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக பிரமாதமாக வீசி கவனத்தை ஈர்த்து இன்று இந்திய அணியில் ஒரு தவிர்க்க முடியாத பவுலர் ஆகியுள்ளார். அன்று பாகிஸ்தானுக்கு எதிராக பாபர் அசாமை இன்ஸ்விங்கரில் டக் அவுட் செய்து ரிஸ்வானை பௌன்சரில் வீழ்த்தி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். பிற்பாடு விராட் கோலியின் சிறப்பான இன்னிங்சினால் இந்திய அணி பரபரப்பாக கடைசி பந்தில் வென்றது.
இந்நிலையில், அர்ஷ்தீப் சிங் பற்றி பேசிட அனில்,“அர்ஷ்தீப் பந்து வீச்சினால் மிகவும் கவரப்பட்டேன். நான் அவருடன் 3 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன். டி20 வடிவத்தில் அவர் வளர்ந்து வந்த விதத்தை கண்கூடாக பார்த்து வந்திருக்கிறேன். கடந்த ஐபிஎல் அவரது வளர்ச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு, பிரஷர் சூழ்நிலையை அவர் எப்படி கையாண்டார் என்பதற்கு அந்த ஐபிஎல் ஒரு சாட்சி.
கடினமான சில ஓவர்களை அவர் பொறுப்பேற்றுக் கொண்டு அணிக்காக வீசினார், டி20 கிரிக்கெட்டில் விக்கெட்டுகள் எத்தனை வீழ்த்தினார் என்று பார்க்கக் கூடாது. எந்தெந்த தருணங்களில் அவர் வீசுகிறார். அந்தத் தருணங்களில் அவரிடம் இருந்த பொறுமை பிரமாதமான ஒரு குணாம்சம். அவரது இந்த குணத்தைத்தான் அன்று இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போதும் பார்த்தோம். 90,000 பார்வையாளர்கள் முன்னிலையில் அதுவும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பதற்றமில்லாமல் வீசுவது என்பது கனவுதான். ஆனால் அதிலும் தேறி விட்டார் அர்ஷ்தீப் சிங்.