Advertisement

ஆஷஸ் 2023: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை சமன்செய்தது இங்கிலாந்து!

ஆஸ்திரெலியாவுக்கு எதிரான 5ஆவது ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 2-2 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan July 31, 2023 • 23:13 PM
ஆஷஸ் 2023: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை சமன்செய்தது இங்கிலாந்து!
ஆஷஸ் 2023: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை சமன்செய்தது இங்கிலாந்து! (Image Source: Google)
Advertisement

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலகப் புகழ்பெற்ற ஆஷஸ் கிரிக்கெட் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி அதிரடியாக வெற்றி பெற்றது. இந்த நிலையில் மிக முக்கியமான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தா அணி மிக அபாரமாக செயல்பட்டு ஆஸ்திரேலியாவை விட முதல் இன்னிங்ஸ் முன்னிலையைப் பெற்று இருந்தது.

ஆனால் போட்டியின் நான்காவது ஐந்தாவது நாளில் பெய்த மழை, ஆஸ்திரேலியா அணியை மீண்டும் ஆஷஸ் தொடரை தக்க வைக்க உதவி செய்தது. இந்நிலையில் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 283 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.  இதில் அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 91 ரன்களைச் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

Trending


இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்களையும், உஸ்மான் கவாஜா 47 ரன்களையும், பாட் கம்மின்ஸ் 36 ரன்களையும், டாட் மர்ஃபி 34 ரன்களையும் சேர்க்க ஆஸ்திரேலிய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 295 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

அதன்பின் 12 ரன்கள் பின் தங்கிய நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணி இன்னிங்ஸின் முதல் பந்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியில் ஜோ ரூட் 91 ரன்களையும், ஸாக் கிரௌலி 73 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோவ் 78 ரன்களையும் சேர்க்க, பென் டக்கெட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரும் ஓரளவு ரன்களைச் சேர்த்தனர். 

இதன்மூலம் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 395 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், டாட் மர்ஃபி 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் இங்கிலாந்து அணி 395 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.  அதன்பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா - டேவிட் வார்னர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அசத்தினர்.

இதில் இருவரும் அரைசதம் கடந்துடன் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 38 ஓவர்களில் 135 ரன்களை சேர்த்த நிலையில் மழை குறுக்கிட்டது.  அதன்பின் தொடர்ந்து மழை நீடித்த காரணத்தினால் நான்காம் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நாளை நடைபெறும் கடைசிநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 98 ஓவர்களில் 249 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடியது.

அதன்படி டேவிட் வார்ன 58 ரன்களுடனும், உஸ்மான் கவாஜா 69 ரன்களுடனும் இன்றைய கடைசிநாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில் டேவிட் வார்னர் 60 ரன்களிலும், உஸ்மான் கவாஜா 72 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய மார்னஸ் லபுசாக்னேவும் 13 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

அதன்பின் இணைந்த ஸ்டீவ் ஸ்மித் - டிராவிஸ் ஹெட் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் கடந்தார். அதேசமயம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டிராவிஸ் 43 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் 54 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித்தும் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து களமிறங்கிய மிட்செல் மார்ஷ் 6, மிட்செல் ஸ்டார்க் 0, கேப்டன் பாட் கம்மின்ஸ் 9, டாட் மர்ஃபி 18 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட அலெக்ஸ் கேரியும் 28 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 334 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. 

இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், மொயீன் அலி 3 விக்கெட்டுகளையும், ஸ்டூவர்ட் பிராட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்மூலம் இங்கிலாந்து அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், ஆஷஸ் டெஸ்ட் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தும் அசத்தியுள்ளது. இருப்பினும் கடந்த முறை ஆச்திரேலிய அணி ஆஷஸ் தொடரை வென்றதால் ஆஷஸ் கோப்பையை அந்த அணி தன்வசப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement