
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்டை வென்று 3-0 என்கிற முன்னிலையுடன் ஆஷஸ் தொடரைக் கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலிய அணி.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 4ஆவது டெஸ்ட் சிட்னியில் புதன் அன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 134 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 416 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கவாஜா 137, ஸ்மித் 67 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 79.1 ஓவர்களில் 294 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜானி பேர்ஸ்டோ 113 ரன்களும் ஸ்டோக்ஸ் 66 ரன்களும் எடுத்தார்கள். ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.