
இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. முதல் போட்டி வான்கேடேவில் நடைபெறும் எனத்தெரிகிறது. இந்த முறை 10 அணிகள் விளையாடுவதால் ஆட்ட முறைகளில் பல்வேறு மாற்றங்களை பிசிசிஐ கொண்டு வந்துள்ளது.
மொத்தமுள்ள 10 அணிகளையும் 2 குரூப்களாக பிரித்து லீக் போட்டிகள் நடைபெறவிருக்கிறது. இதில் இருந்து தேர்வு செய்யப்படவுள்ள அணிகள் தான் ப்ளே ஆஃப்-க்கு செல்லும். அதன்படி 70 லீக் போட்டிகள் மற்றும் 4 ப்ளே ஆஃப் போட்டிகள் நடைபெறவிருக்கிறது. இதற்கான அட்டவணை இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகலாம்.
இந்நிலையில் ஐபிஎல் தொடர் நடக்கக்கூடாது என இங்கிலாந்தின் முன்னாள் வீரர்கள் தொடர் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர். இங்கிலாந்து அணி சமீபத்தில் ஆஷஸ் தொடரில் 4 - 0 என்ற புள்ளிக்கணக்கில் மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் ஐபிஎல்-ல் வீரர்கள் விளையாடுவதால் தான் சர்வதேச போட்டிகளில் சொதப்புகின்றனர் எனக்கூறுகின்றனர். பத்திரிகையாளர் ஒருவர் ஐபிஎல் தொடர் ஒரு ஆண்டில் 3இல் ஒரு பகுதியை எடுத்துக்கொள்கிறது எனக் குற்றம்சாட்டியுள்ளார்.