தோனியின் சாதனையை சமன்செய்த இஷான் கிஷன்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் 12 ஆண்டுகால சாதனையை இஷான் கிஷன் இன்று சமன்செய்துள்ளார்.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இன்று கண்டி நகரில் நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் ஆரம்பத்திலேயே டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற இந்தியா மழை பெய்யும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் போட்டி ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே வந்து சென்ற மழைக்குப்பின் நெருப்பாக பந்துவீசிய ஷாஹீன் அஃப்ரிடி எதிர்பார்த்தது போலவே இந்தியாவின் கேப்டன் ரோஹித் சர்மாவை 11 ரன்களில் க்ளீன் போல்ட்டாக்கி அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியையும் 4 ரன்கள் காலி செய்தார்.
போதாகுறைக்கு அடுத்ததாக வந்து இந்தியாவின் சரிவிலிருந்து மீட்டெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயரை 14 ரன்களில் தன்னுடைய மிரட்டலான வேகத்தால் அவுட்டாக்கிய ஹரிஷ் ரவூஃப் மறுபுறம் திணறிக் கொண்டிருந்த மற்றொரு தொடக்க வீரர் ஷ்ப்மன் கில்லையும் 10 ரன்களில் கிளீன் போல்ட்டாக்கினார். அதனால் 66/4 என்ற மோசமான துவக்கத்தை பெற்று திண்டாடிய இந்தியாவை மிடில் ஆர்டரில் வந்த இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் நிதானமாக விளையாடி காப்பாற்ற முயற்சித்தனர்.
Trending
குறிப்பாக காயமடைந்த ராகுலுக்கு பதிலாக விக்கெட் கீப்பராக விளையாடும் வாய்ப்பை பெற்ற இஷான் கிஷன் பெரும்பாலும் துவக்க வீரராக களமிறங்குவார் என்ற நிலைமையில் இப்போட்டியில் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்தியாவுக்காக பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அதற்கு மறுபுறம் ஹர்திக் பாண்டியா தம்முடைய பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கை கொடுத்ததை பயன்படுத்திய அவர் அசத்தலாக செயல்பட்டு அரை சதம் கடந்தார்.
கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் 3 போட்டிகளிலும் ஹாட்ரிக் அரை சதமடித்த அவர் தற்போது இந்த போட்டியிலும் தொடர்ந்து 4வது முறையாக 50 ரன்கள் கடந்துள்ளார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் 4 தொடர்ச்சியான போட்டிகளில் 50 ரன்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் 12 வருட தனித்துவமான சாதனையை சமன் செய்து இஷான் கிஷன் வெற்றிக்கு போராடி வருகிறார்.
இதற்கு முன் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் எம்எஸ் தோனி 4 தொடர்ச்சியான போட்டிகளில் அரை சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சாதனை படைத்தார். தற்போது அவரது சாதனையை சமன் செய்துள்ள இஷான் கிசான் போராடி 9 பவுண்டரி 2 சிக்சருடன் 82 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
Win Big, Make Your Cricket Tales Now