கடந்த ஆண்டு மகளிருக்கான பிரிமியர் லீக் டி20 தொடர் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஐந்து அணிகளைக் கொண்டு முதல்முறையாக நடத்தப்பட்டது. இந்தத் தொடரில் இறுதிப் போட்டிக்கு வந்த மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்று முதல் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
மகளிருக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் தொடர் ஆரம்பத்தில் சில ஆட்டங்கள் மெதுவாக நகர்ந்ததாக தெரிந்தாலும், ஆனால் போகப் போக ரசிகர்களை தன் வசம் இழுக்க ஆரம்பித்தது. இந்தத் தொடர் குறித்து தினந்தோறும் நடக்கும் போட்டிகள் பற்றி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர ஆரம்பித்தார்கள். இறுதியில் இந்த தொடர் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
ஒரு காலத்தில் மகளிர் கிரிக்கெட்டுக்கு எந்தவித பெரிய ஆதரவும் சக கிரிக்கெட் வாரியங்களால் கூட கிடைக்காது. ஏதாவது ஒப்புக்குத்தான் உலகம் முழுக்க நடைபெறுவதாக காட்டப்பட்டது. ஆனால் நாளாக நாளாக வீராங்கனைகள் தங்கள் திறமைகளை கூர்த்தீட்டி நல்ல கிரிக்கெட்டை கொடுக்க ஆரம்பித்தார்கள். இதன் மூலம் மகளிர் கிரிக்கெட்டுக்கு வெளிச்சம் கிடைக்க ஆரம்பித்தது.