
கடந்த 2016 உலகக் கோப்பை போட்டியில் முதல் சுற்றுடன் வெளியேறிய பாகிஸ்தான், இந்த ஆண்டு அசைக்க முடியாத அணியாக உருவெடுத்து அரையிறுதிக்கு வந்துள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2009 முதல் சா்வதேச இருதரப்பு தொடா்கள், பாகிஸ்தான் சூப்பா் லீக் சீசன்களை அந்த அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடி வருகிறது.
இதனால் அங்குள்ள ஆடுகளங்களின் தன்மையை நன்றாக உணா்ந்து அதற்கேற்றாற்போல் தன்னை தயாா் செய்துகொண்டுள்ளது அணிக்கு சாதகம். இந்நிலையில், முதல் ஆட்டத்திலேயே இந்தியாவை வென்றது கூடுதல் உத்வேகம் அளிக்க, நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மட்டும் சற்று தடுமாற்றம் காட்டியது பாகிஸ்தான்.
பேட்டிங்கைப் பொருத்தவரை, அணியின் கேப்டன் பாபா் ஆசாம் இப்போட்டியின் முன்னணி ரன் ஸ்கோரா் (264) ஆக இருக்கிறாா். 4 அரைசதங்கள் அடித்திருக்கும் அவா், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கும் சவால் அளிப்பாா். டாப் ஆா்டரில் அவரும், முகமது ரிஸ்வானும் சறுக்கினால் மிடில் ஆா்டரில் ஆசிஃப் அலி, ஷோயப் மாலிக், முகமது ஹஃபீஸ் அதிரடி காட்டுவாா்கள்.