
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி 2-0 என ஒருநாள் தொடரை ஏற்கனவே வென்றுவிட்ட நிலையில், 3வது ஒருநாள் போட்டி இன்று மெல்பர்னில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 38 ஓவரில் 269 ரன்களை குவித்தனர். வார்னர் 102 பந்தில் 106 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி 130 பந்தில் 16 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 152 ரன்களை குவித்தார். ஸ்மித்(21) மற்றும் ஸ்டோய்னிஸ்(12) ஆகிய இருவரும் ஏமாற்றமளித்தனர். 42வது ஓவர் முடிவில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 48 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டெத் ஓவர்களில் அடித்து ஆடிய மிட்செல் மார்ஷ் 16 பந்தில் 30 ரன்களை விளாச, 48 ஓவரில் 355 ரன்களை குவித்தது ஆஸ்திரேலிய அணி.