
டி20 உலகக்கோப்பை தொடரின் 8ஆவது சீசன் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அடிலெய்டில் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகும் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி ஆஃப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் 2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவில்லை என்று 5 புள்ளிகளுடன் உள்ள ஆஸ்திரேலியா அணி ரன்-ரேட்டில் வெகுவாக பின்தங்கி இருக்கிறது. இதனால் அந்த அணி அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க இன்றைய ஆட்டத்தில் மிகப்பெரிய வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்த வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. அதனை செய்தாலும் நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்குரிய கடைசி லீக் ஆட்டத்தின் முடிவை பொறுத்தே ஆஸ்திரேலியாவின் தலைவிதி தீர்மானிக்கப்படும். குறிப்பாக நியூசிலாந்து அணி, அயர்லாந்திடம் வீழ்ந்தால் ஆஸ்திரேலியாவுக்கு சிக்கல் தீரும்.
அயர்லாந்துக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச், டிம் டேவிட் ஆகியோர் தசைப்பிடிப்பு காயம் அடைந்தனர். இதனால் அவர்கள் இருவரும் இந்த ஆட்டத்தில் களம் காணுவார்களா? என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. 'உடல் தகுதி சோதனையின் போது ஒரு சதவீதம் திருப்தியில்லை என்றால் கூட விளையாடமாட்டேன். இருப்பினும் நான் விளையாடுவதற்கு 70 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன்' என்று ஆரோன் ஃபிஞ்ச் தெரிவித்துள்ளார். ஃபிஞ்ச் விளையாடாவிட்டால் மேத்யூ வேட் கேப்டன் பணியை கவனிப்பார்.