
கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கேப்டவுனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் இளம் பேட்ஸ்மேன் கேமரூன் பான்கிராஃப்ட் உப்புத்தாள் கொண்டு பந்தை தேய்த்து அதன் தன்மையை மாற்ற முயன்றது அங்கிருந்த கேமராவின் மூலம் அம்பலமானது. பந்து ‘ஸ்விங்’ ஆவதற்கு வசதியாக அவர் இவ்வாறு செய்ததும், இந்த திட்டத்தின் பின்னணியில் துணை கேப்டன் டேவிட் வார்னர் இருந்ததும், அதனை கேப்டன் ஸ்டீவன் சுமித் தெரிந்தும் கண்டுகொள்ளாமல் விட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பான்கிராப்டுக்கு 9 மாதமும், ஸ்டீவ் ஸ்மித், வார்னருக்கு தலா ஒரு ஆண்டு தடை விதித்தது.
இந்த விவகாரத்தில் பான்கிராப்ட் 3 ஆண்டுகளுக்கு பிறகு புதிய புயலை கிளப்பி உள்ளார். தற்போது இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வரும் அவர் சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், ‘பந்தை நான் தேய்த்தது பவுலர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்கான தான். எனவே இந்த விஷயம் அணியில் உள்ள பந்து வீச்சாளர்களுக்கு தெரிந்து இருக்கும் என்பதில் சந்தேகமில்லை’ என்று தெரிவித்து இருந்தார். ஆனால் எந்த பவுலருக்கு தெரியும் என்று சொல்லவில்லை.
இதனால் பந்தை சேதப்படுத்திய விவகாரம் மீண்டும் சூடு பிடித்தது. ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் மைக்கேல் கிளார்க், கில்கிறிஸ்ட் உள்பட பலர் இந்த விஷயத்தில் முழுமையாக விசாரணை நடத்தி சந்தேகம் மீண்டும் எழாமல் இருக்க தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.