
2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் முதல்முறையாக ஹைபிரிட் முறையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் வைத்து நடைபெற்று வருகிறது . 13 போட்டிகளைக் கொண்ட ஆசிய கோப்பை தொடரில் நான்கு போட்டிகள் பாகிஸ்தானிலும் ஒன்பது போட்டிகள் இலங்கையிலும் நடைபெற இருக்கிறது.
இதன் முதல் போட்டி இன்று பாகிஸ்தான் மற்றும் நேபால் அணிகளுக்கிடையே முல்தான் நகரில் வைத்து இன்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்களான பக்கர் ஜமான் மற்றும் இமாம் உல் ஹக் ஆகியோர் விரைவிலேயே ஆட்டம் இழக்க பாகிஸ்தான் அணி 25 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் அந்த அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
அந்த அணியின் எண்ணிக்கை 111 ஆக இருந்தபோது சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ரிஸ்வான் 50 பந்துகளில் 44 ரன்கள் எடுத்த நிலையில் விசித்திரமான முறையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இவரைத் தொடர்ந்து ஆட வந்த அகா சல்மான் ஐந்து ரன்களில் ஆட்டம் இழக்க மீண்டும் ஒரு சிறிய சரிவை சந்தித்தது. ஐந்தாவது விக்கெட் இருக்கு பாபர் அசாம் உடன் ஜோடி சேர்ந்தார் இப்திகார் அகமது. பாபர் அசாம் ஒரு முனையில் நிதானமாக ஆட மறுமுனையில் இப்திகார் அதிரடியாக ஆடினார். இதனால் பாகிஸ்தான் அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது.