
டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் வெற்றிகரமாக நடந்துமுடிந்தது. இன்று மெல்பர்னில் நடந்த ஃபைனலில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி 2வது முறையாக டி20 உலக கோப்பையை வென்றது.
மெல்பர்னில் நடந்த ஃபைனலில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 137 ரன்கள் மட்டுமே அடித்தது. அந்த அணியில் ஷான் மசூத் மட்டுமே நன்றாக பேட்டிங் ஆடி 38 ரன்கள் அடித்தார். அவரைத்தவிர மற்ற வீரர்கள் யாரும் சரியாக பேட்டிங் ஆடாததால் 20 ஓவரில் வெறும் 137 ரன்கள் மட்டுமே அடித்தது பாகிஸ்தான் அணி.
138 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ்(1), ஜோஸ் பட்லர் (26), ஹாரி ப்ரூக் (20) ஆகியோர் ஏமாற்றமளித்தாலும், பென் ஸ்டோக்ஸ் நிலைத்து நின்று நிதானத்தை கையாண்டு பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்து கடைசிவரை களத்தில் நின்று போட்டியை ஜெயித்து கொடுத்தார். 19ஆவது ஓவரில் இலக்கை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2வது முறையாக டி20 உலக கோப்பையை வென்றது.