
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்த முறை ஆசிய கோப்பை 50 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது. அதன்படி இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. அதில் நேபாள அணியை துவம்சம் செய்து பாகிஸ்தான் அணி வெற்றியோடு தொடங்கியது.
இந்நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பல்லகெலேயில் இன்று நடக்கும் 2ஆவது லீக்கில் நடப்பு சாம்பியன் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி, ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்கதேசத்தை சந்திக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது.
இலங்கை அணியில் ஹசரங்கா, சமீரா, லாஹிரு குமாரா போன்ற முன்னணி பந்துவீச்சாளர்கள் காயத்தால் விலகியது பாதிப்பு தான். இதே போல் வங்கதேச அணியில் காயத்தால் தமிம் இக்பால், எபாதத் ஹூசைன் இடம் பெறவில்லை. வைரஸ் காய்ச்சல் பாதிப்பில் இருந்து மீளாத லிட்டான் தாஸ் நேற்று தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அவருக்கு பதிலாக அனமுல் ஹக் சேர்க்கப்பட்டுள்ளார்.