
ஆசிய கோப்பை 2023 தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் கோலாகலமாக தொடங்குகிறது. மொத்தம் 6 கிரிக்கெட் அணிகள் கோப்பையை வெல்வதற்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன. வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்த தொடர் இம்முறை ஒருநாள் போட்டிகளாக நடைபெற உள்ளது.
அதில் பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், நேபாள் ஆகிய 6 அணிகள் கோப்பையை வெல்வதற்காக மோத உள்ளன. இந்த 6 அணிகளும் குரூப் ஏ மற்றும் பி ஆகிய 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் தலா ஒரு முறை மோத உள்ளன. அதில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். அதில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மாபெரும் இறுதிப்போட்டியில் கோப்பையை வெல்வதற்காக மோதும் என்ற வகையில் இந்த தொடரின் ஃபார்மட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தத் தொடரில் கோப்பையை வெல்வதற்காக வங்கதேச அணி தற்போது இறுதிக்கட்ட பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் உச்சகட்டமாக வங்கதேச தொடக்க வீரர் முகமது நைம் இந்த ஆசிய கோப்பையில் அதிரடியாக விளையாடுவதற்காக நெருப்பு மீது நடந்து வித்தியாசமான அனல் பறக்கும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதாவது நெருப்பு மீது நடப்பது மனதளவில் அமைதியை ஏற்படுத்தும் என்பதால் அந்த வகையான பயிற்சியை அவர் பயிற்சியாளர் வழிகாட்டுதலுடன் எடுத்து வருகிறார்.