தன் விளையாடியதில் இந்த அணிக்கு தான் அதிக ரசிகர் பட்டாளம் உள்ளது - தினேஷ் கார்த்திக்!
ஐபிஎல்லில் 6 அணிகளில் ஆடியுள்ள சீனியர் வீரரான தினேஷ் கார்த்திக், தான் ஆடிய அணிகளில் எந்த அணிக்கு அதிகமான ரசிகர் பட்டாளம் இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
ஐபிஎல்லில் 229 போட்டிகளில் விளையாடி 4,376 ரன்களை குவித்துள்ள சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக். தமிழகத்தை சேர்ந்த அனுபவம் வாய்ந்த வீரர் தினேஷ் கார்த்திக், இந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக ஆடினார்.
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலத்தில் தினேஷ் கார்த்திக்கை எடுக்க சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. கடைசியில் ஆர்சிபி அணி அவரை ரூ.5.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
Trending
ஆர்சிபி அணி அவர் மீது வைத்த நம்பிக்கையை வீணடிக்காத தினேஷ் கார்த்திக், டெத் ஓவர்களில் காட்டடி அடித்து ஆர்சிபி அணிக்கு பல போட்டிகளை வெற்றிகரமாக முடித்துக்கொடுத்து அந்த அணியின் ஃபினிஷராக ஜொலித்தார். ஆர்சிபி அணி பிளே ஆஃபிற்கு முன்னேற தினேஷ் கார்த்திக்கின் பேட்டிங் முக்கியமான காரணம்.
எலிமினேட்டரில் கூட அபாரமாக பேட்டிங் ஆடி சிறப்பாக முடித்துக்கொடுத்த தினேஷ் கார்த்திக், 2ஆவது தகுதிப்போட்டியில் சோபிக்கவில்லை. அதனால் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறிய ஆர்சிபி அணியின் ஐபிஎல் கோப்பை கனவு மீண்டுமொரு முறை தகர்ந்தது.
ஐபிஎல்லில் டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ், கேகேஆர் ஆகிய அணிகளுக்காக ஆடிவிட்டு, இப்போது ஆர்சிபிக்காக ஆடிவரும் தினேஷ் கார்த்திக், இதற்கு முன் 2015ம் ஆண்டு ஆர்சிபி அணியில் ஏற்கனவே இடம்பிடித்திருந்தார்.
ஐபிஎல்லில் 6 அணிகளில் ஆடியுள்ள தினேஷ் கார்த்திக், தான் ஆடிய அணிகளில் ஆர்சிபி அணிக்குத்தான் அதிகமான ரசிகர் பட்டாளம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள தினேஷ் கார்த்திக், “நான் நிறைய அணிகளுக்காக ஆடியிருக்கிறேன். ஆனால் அதிகமான மற்றும் மிகச்சிறந்த ரசிகர் பட்டாளத்தை கொண்ட அணி ஆர்சிபி தான். ஆர்சிபி ரசிகர்கள் பயங்கரமாக உற்சாகம் செய்கிறார்கள். ரசிகர்களின் ஆதரவுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்த மாதிரி ரசிகர்கள் இல்லாமல், என் வயதில் என்னால் இந்தளவிற்கு சிறப்பாக ஆடமுடியாது” என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now