
ஐபிஎல் தொடரை போன்றே பாகிஸ்தானில் நடைபெறும் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பெஷ்வார் சால்மி மற்றும் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்த போட்டியை விட பாகிஸ்தான் வீரர் சோஹைல் தன்வீர் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் பென் கட்டிங் ஆகியோர் இடையே நடந்த மோதல் தான் பெரும் பரபரப்பை கிளப்பியது. கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற கரீபியன் ப்ரீமியர் லீக்கில் அவர்கள் இருவரும் எதிர் எதிர் அணியில் விளையாடினர். அப்போது ஒரு போட்டியில் பென் கட்டிங்கை க்ளீன் போல்ட்டாக்கிய பவுலர் சோஹைல் தன்வீர் தனது 2 நடுவிரல்களையும் காட்டி அவமானப்படுத்தி அனுப்பினார்.
இந்த சம்பவத்திற்கு ஒழுங்கீன நடவடிக்கையாக எடுத்து போட்டி கட்டணத்தில் இருந்து 15% அபராதமாக விதிக்கப்பட்டது. இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று நடந்த பிஎஸ்எல் தொடரில் பென் கட்டிங் பதிலடி கொடுத்தார். தன்வீர் வீசிய 19ஆவது ஓவரில் பென் கட்டிங் 4 சிக்ஸர்களுடன் சேர்த்து மொத்தம் 27 ரன்களை விளாசித் தள்ளினார். இதன் பிறகு தன்வீரை பார்த்து தனது 2 நடுவிரல்களையும் காட்டி பழி தீர்த்துக் கொண்டார்.