Advertisement
Advertisement
Advertisement

பெரிய விஷயங்கள் காத்திருக்கின்றன - சாதனை படைத்த ஜெகதீசனுக்கு தினேஷ் கார்த்திக் வாழ்த்து!

ஜெகதீசன் மற்றும் சுதர்சன் ஆகிய இருவரையும் குறிப்பிட்ட அவர் இந்த தொடரில் இந்த தொடக்க ஜோடி தான் பட்டாசாக செயல்படுவதாக தினேஷ் கார்த்திக் தனது ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 22, 2022 • 15:21 PM
 Big things await: Karthik on Jagadeesan's record-breaking 277 in 50-over match
Big things await: Karthik on Jagadeesan's record-breaking 277 in 50-over match (Image Source: Google)
Advertisement

இந்தியாவின் பிரபல உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான 2022 விஜய் ஹசாரே கோப்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அருணாச்சல பிரதேசத்தை எதிர்கொண்ட தமிழகம் ஏராளமான உலக சாதனைகளை படைத்தது. பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் சரவெடியாக செயல்பட்டு 506/2 ரன்களை குவித்தது. அதன் வாயிலாக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 500 ரன்கள் கடந்த முதல் அணி மற்றும் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த அணி என்ற இரட்டை உலக சாதனைகளை படைத்த தமிழ்நாடு உலகை திரும்பி பார்க்க வைத்தது.

அதற்கு 416 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த நாராயண ஜெகதீசன் – சாய் சுதர்சன் ஆகியோர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 400 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் ஜோடி மற்றும் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்கள் குவித்த ஜோடி என்ற இரட்டை உலக சாதனைகளை படைத்தனர். அதில் சாய் சுதர்சன் 154 ரன்கள் எடுத்த நிலையில் 277 ரன்களை விளாசிய நாராயண் ஜெகதீசன் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த பேட்ஸ்மேன் மற்றும் அதிவேகமாக (114 பந்துகள்) இரட்டை சதமடித்த பேட்ஸ்மேன் ஆகிய 2 உலக சாதனைகளை படைத்தார்

Trending


அது போக இந்த தொடரில் தொடர்ந்து 5 போட்டிகளில் 5 சதங்களை அடித்த அவர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 சதங்களை அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற 3வது உலக சாதனையும் படைத்தார். அப்படி பேட்டிங்கில் அடித்து நொறுக்கிய தமிழகம் பந்து வீச்சிலும் அருணாச்சல பிரதேசத்தை வெறும் 71 ரன்கள் சுருட்டி 435 ரன்கள் வித்தியாசத்தில் வென்று லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணியாக மற்றுமொரு உலக சாதனை படைத்தது. அப்படி விஸ்வரூபம் எடுத்து அருணாச்சலப் பிரதேசத்தை துவம்சம் செய்த தமிழ்நாடு உலக அளவில் பாராட்டுகளை பெற்று வரும் நிலையில் மூத்த வீரர் தினேஷ் கார்த்திக்கும் பாராட்டினார்.

குறிப்பாக ஜெகதீசன் மற்றும் சுதர்சன் ஆகிய இருவரையும் குறிப்பிட்ட அவர் இந்த தொடரில் இந்த ஓப்பனிங் ஜோடி தான் பட்டாசாக செயல்படுவதாக தனது ட்விட்டரில் பாராட்டினார். ஆனால் அருணாச்சலப் பிரதேசம் போன்ற வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த கத்துக்குட்டி அணி வலுவான தமிழக அணியுடன் மோதி படுதோல்வியை சந்திக்கும் வகையில் போட்டியை வடிவமைத்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மீது அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது சர்வதேச அரங்கில் இந்தியா, வங்கதேசம் போன்ற அணிகளை போல உள்ளூர் கிரிக்கெட்டிலும் தமிழ்நாடு, மும்பை போன்ற அணிகள் வலுவாகவும் அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து போன்ற வடகிழக்கு மாநில அணிகள் கத்துக் குட்டிகளாகவும் திகழ்கின்றன.

எனவே அந்த அணிகளை எலைட் பிரிவில் தமிழகம் போன்ற அணியிடம் மோதும் வகையில் அமைந்துள்ள இத்தொடரின் வடிவத்தை (ஃபார்மட்டை) தினேஷ் கார்த்திக் விமர்சித்துள்ளார். மேலும் சிறிய அணிகளுக்காக தனி பிரிவை உருவாக்கி அதில் வெல்லும் சிறந்த அணிகளை தமிழகம் போன்ற வலுவான அணிகளுடன் மோத வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement