
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் கேப்டவுனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியது. அந்த அணியின் இளம் பேட்ஸ்மேன் கேமரூன் பான்கிராஃப்ட் உப்புத்தாளை கொண்டு பந்தை ஒரு பக்கம் தேய்த்து அதன் தன்மையை மாற்ற முயற்சித்தது கேமரா பதிவின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
பந்து ஸ்விங் ஆக வேண்டும் என்பதற்காக அவர் இவ்வாறு செய்ததும், இதற்கு அணியின் துணை கேப்டன் டேவிட் வார்னர் செயல்பட்டதும், இது விதிமுறைக்கு புறம்பானது என்று அறிந்திருந்தும் கேப்டன் ஸ்டீவன் சுமித் அதை கண்டுகொள்ளாமல் விட்டதும் தெரியவந்தது. அவர்கள் தங்களது தவறை பகிரங்கமாக ஒப்புக் கொண்டனர்.
இது குறித்து விசாரணை நடத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பான்கிராஃப்ட்டுக்கு 9 மாதமும், சுமித், வார்னருக்கு ஓராண்டு தடை விதித்தது. சுமித் கேப்டன் பதவியையும் இழந்தார்.