
இந்தியாவில் நடைபெற்று முடிந்த 15ஆவது சீசன் ஐபிஎல் தொடருக்கான சாம்பியன் பட்டத்தை குஜராத் அணி கைப்பற்றி அசத்தியது. இந்த 15ஆவது தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு ஒவ்வொரு அணியிலும் நான்கு வீரர்கள் மட்டுமே தக்க வைக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இத்தொடரில் புதிதாக குஜராத் மற்றும் லக்னோ ஆகிய நகரங்களை தலைமையாகக் கொண்டு இரண்டு அணிகளும் உருவாக்கப்பட்டன.
அப்படி புதிதாக சேர்க்கப்பட்ட அணிகளும் மெகா ஏலத்தில் கலந்து கொண்டு தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு வாங்கினர். இப்படி வீரர்கள் அனைவரும் கலைக்கப்பட்டதால் ஒவ்வொரு அணியிலும் பங்கேற்று இருந்த முக்கிய வீரர்கள் வெவ்வேறு அணிகளுக்கு இடம் மாறினர். இதன் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை கைப்பற்றப்போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு அதிகளவில் நிலவியது.
இவ்வேளையில் ஐபிஎல் வரலாற்றில் ஜாம்பவான் அணிகளாக பார்க்கப்படும் மும்பை மற்றும் சென்னை அணிகள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தன. குறிப்பாக புள்ளி பட்டியலில் கடைசி இரு இடங்களை பிடித்து இவ்விரு அணிகளும் வெளியேற இத்தொடரில் அறிமுக அணிகளாக விளையாடிய லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதிலும் குறிப்பாக குஜராத் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.