
இந்திய அணியில் மூத்த வீரர், முன்னாள் கேப்டன், வெற்றிகரமான கேப்டன் என்ற அடையாளங்களுடன் வீரர்கள் அணியில் ஒட்டிக்கொண்டு இளம் வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கைப் பாதையை அடைப்பது காலங்காலமாக நடந்து வருகிறது. அந்த வகையில் தற்போது சத்தேஸ்வர் புஜாரா, அஜின்கயே ரஹானே இருவரும் சேர்ந்துள்ளார்கள்.
கடந்த 2 ஆண்டுகளாகவே டெஸ்ட் போட்டியில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் ரஹானே, புஜாரா இருவரையும் நீக்கிவிட்டு இளம் வீரர்களைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் எழுந்தது. ஆனால், அந்த விமர்சனங்கள் எழும்போது ஒரு அரை சதம், சதம் மட்டும் அடித்து ஃபார்முக்கு வந்துவிட்டதாகக் கூறி இருவரும் மீண்டும் அணியில் ஒட்டிக்கொண்டு வருகின்றனர்.
தென் ஆப்பிரிக்கத் தொடர்தான் இருவருக்கும் வழங்கப்படும் கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று சமீபத்தில் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. அதன் பிறகாவது இருவரின் பேட்டிங்கிலும் ஏதாவது முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்த்தால், ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.