
ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று ஐபிஎல் தொடரின் 49ஆவது லீக் போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டூ பிளெஸ்ஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பவுலிங்கை தேர்வுசெய்ய அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை குவித்தது.
பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக மஹிபால் லாம்ரோர் 42 ரன்களையும், டு பிளெஸிஸ் 38 ரன்களையும் குவித்தனர். பின்னர் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டேவான் கான்வே ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக அருமையான துவக்கத்தை பெற்றது. முதல் விக்கெட்டுக்கு 6.4 ஓவர்களில் 54 ரன்கள் சேர்த்து சென்னை அணி பலமான துவக்கத்தை பெற்றதால் நிச்சயம் இந்த சேசிங்கை எளிதாக பூர்த்தி செய்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அப்போதுதான் பெங்களூரு அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தினார். அதாவது அவர் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் உத்தப்பாவையும், அதற்கு அடுத்த ஓவரில் அம்பத்தி ராயுடுவையும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வைத்ததால் சென்னை அணி அடுத்தடுத்து இரண்டு விக்கட்டுகளை இழுந்து 75 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது. சி.எஸ்.கே அணியின் முக்கியமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான உத்தப்பா மற்றும் ராயுடு ஆகிய இருவரையும் சொற்ப ரன்களில் மேக்ஸ்வெல் வீழ்த்தியதால் பின்வரிசையில் வந்தவர்கள் அழுத்தம் காரணமாக பெரிய ஷாட்களை விளையாட முடியாமல் தொடர்ச்சியாக ஆட்டமிழந்து வெளியேறினர்.