
வெஸ்ட் இண்டீஸின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 10ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 3ஆவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியும், பார்போடாஸ் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தினர்.
இப்போட்டியில் டாஸ் வென்ற பார்போடாஸ் அணி முதலில் பந்துவீச முடிவுசெய்தது. மேலும் மழை பெய்த காரணத்தால் ஆட்டம் 17 ஓவர்களாகவும் குறைக்கப்பட்டது. அதன்படி களமிறங்கிய பேட்ரியாட்ஸ் அணியின் தொடக்க வீரர் ஆண்ட்ரே ஃபிளெட்சர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மளமளவென ஸ்கோரை உயர்த்தினர்.
ஆனால் மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். ஆனாலும் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆண்ட்ரே ஃபிளெட்சர் அரைசதம் கடந்ததுடன் 81 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.