
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 169 ரன்களை குவித்தது. பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 16.5 ஓவர்களில் வெறும் 87 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனதன் காரணமாக 82 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது மட்டுமின்றி இந்த தொடரையும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆவேஷ் கான் 4 ஓவர்களில் வெறும் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். இந்தூரைச் சேர்ந்த 25 வயதே ஆன அவேஷ் கான் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தாலும் கடந்த இரண்டு சீசன்களாக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார்.
இதன் காரணமாக இந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமான அவர் நேற்றைய போட்டிக்கு முன்னதாக 5 போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்திருந்தார். அதிலும் இந்த தென் ஆப்பிரிக்க தொடர் ஆரம்பித்ததிலிருந்து ஹர்ஷல் பட்டேல் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வந்த வேளையில் முதல் மூன்று போட்டிகளிலுமே ஆவேஷ் கான் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தார்.