
பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள், 1 டி20 என மூன்று தொடர்களிலும் விளையாடுகிறது ஆஸ்திரேலிய அணி. டெஸ்ட் தொடர் மார்ச் 4 அன்றும் ஒருநாள் தொடர் மார்ச் 29 அன்றும் தொடங்குகின்றன. டி20 ஆட்டம் ஏப்ரல் 5 அன்று நடைபெறுகிறது.
முதல் டெஸ்ட், ஒருநாள் தொடர், டி20 ஆட்டம் ஆகியவை ராவல்பிண்டியிலும் கராச்சி, லாகூரில் தலா ஒரு டெஸ்டும் நடைபெறுகின்றன. 2019 ஆஷஸுக்குப் பிறகு முதல்முறையாக வெளிநாட்டில் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது ஆஸ்திரேலிய அணி.
இந்நிலையில் டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பு ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஆஷ்டன் அகரின் மனைவிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதில் உங்களுடைய கணவர் பாகிஸ்தானுக்குச் சென்றால் அவர் உயிருடன் திரும்ப மாட்டார் என இன்ஸ்டகிராம் வழியே ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். தனது இன்ஸ்டகிராம் கணக்கு வழியே விடுக்கப்பட்ட மிரட்டலைக் கண்டு பதறிய அகரின் மனைவி மெடிலீன், உடனடியாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு இதுபற்றி தகவல் அளித்தார்.