ஐபிஎல் 2022: அஸ்வினை மூன்றாம் வரிசையில் களமிறக்கியது ஏன்? - சாம்சன் விளக்கம்!
ஐபிஎல் 15ஆவது சீசன் 24ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைடன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய குஜராத் அணியில் ஓபனர்கள் மேத்யூ வேட் 12 (6), ஷுப்மன் கில் 13 (14) ஆகியோர் ஏமாற்றிய நிலையில் அடுத்து ஹார்திக் பாண்டியா 87 (52), அபினவ் மனோகர் 43 (28), டேவிட் மில்லர் 31 (14) ஆகியோர் சிறப்பாக விளையாடியதால், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 192/4 ரன்களை சேர்த்தது.
இலக்கைத் துரத்திக் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஜாஸ் பட்லர் 54 (24) மட்டுமே சிறப்பாக விளையாடினார். அடுத்து ஷிம்ரோன் ஹெட்மையர் தனது பங்கிற்கு 29 (17) ரன்களை சேர்த்தார். மற்றவர்கள் சிறப்பாக சோபிக்காததால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 155/9 ரன்களை மட்டும் சேர்த்து, 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
Trending
இத்தோல்விக்குப் பிறகு பேட்டிகொடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சாம்சன், “விக்கெட்கள் கையிருப்பில் இருந்திருந்தால், நாங்கள் நிச்சயம் வெற்றி பெற்றிருப்போம். பவர் பிளேவில் எங்களது ரன் ரேட் சிறப்பாகத்தான் இருந்தது. இருப்பினும், நாங்கள் தொடர்ந்து விக்கெட்களை இழந்ததால், விக்கெட்களை வீழ்த்த முடியவில்லை. டிரென்ட் போல்ட் நேற்று இரவு காயம் காரணமாக அவதிப்பட்டதால்தான், அணியில் சேர்க்க முடியவில்லை. அவர் இல்லாதது எங்களுக்கு பெரிய இழப்புதான்.
ஹார்திக் பாண்டியாவின் ஆட்டம் இன்று சிறப்பாக இருந்தது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் அதிரடியாக செயல்பட்டார். கடந்த சீசனில் நான் மூன்றாவது இடத்தில் களமிறங்கி வந்தேன். இம்முறை நாள் 4 அல்லது 5ஆவது இடத்தில் களமிறங்கினால் நன்றாக இருக்கும் என அணி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
கடந்த மூன்று போட்டிகளில் படிக்கல் மூன்றாவது இடத்தில் களமிறங்கினார். இம்முறை ஒரு மாற்றத்திற்காக அஸ்வினை அந்த இடத்தில் களமிறக்கினோம். நேரத்திற்கு தகுந்தாற்போல் முடிவுகள் மாற்றியமைக்கப்படும்” எனத் தெரிவித்தார். இதன்மூலம், அஸ்வினுக்கு மூன்றாவது இடம் நிரந்தம் இல்லை என்பது தெரியவருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now