இவரைப் போன்ற வீரர் கிடைப்பது மிகவும் அரிது - கீரென் பொல்லார்ட்!
இந்நிலையில் ஹர்திக் பாண்டியா பல வருடங்களில் தேடினால் ஒரு முறை அரிதாக கிடைக்கும் திறமை வாய்ந்த வீரர் என்று முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கைரன் பொல்லார்ட் பாராட்டியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16 முதல் ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்குகிறது. இத்தொடரில் 2007க்குப்பின் 15 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்ல களமிறங்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் முதன்மை சுழல் பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆரம்பத்திலேயும் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்திலும் காயமடைந்து வெளியேறியது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் அவர்கள் இல்லாத குறையைப் போக்கும் அளவுக்கு அந்த 2 துறையிலும் சமநிலையை ஏற்படுத்த கூடிய ஹர்திக் பாண்டியா நல்ல பார்மில் இருப்பது ஓரளவு பலமாக அமைகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு அறிமுகமாகி 2018 முதல் 3 வகையான இந்திய அணியிலும் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் தரமான வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் கிடைத்து விட்டார் என்ற மகிழ்ச்சியை ரசிகர்களிடம் ஏற்படுத்தினார்.
Trending
ஆனால் அதே வருடம் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பையிலும் 2019 உலகக் கோப்பைக்கு பின்பும் சந்தித்த காயத்தால் பந்து வீச முடியாமல் தவித்த அவர் பேட்டிங்கில் பார்மை இழந்தார். அது 2021 டி20 உலக கோப்பையில் இந்தியா லீக் சுற்றுடன் வெளியேறும் அளவுக்கு எதிரொலித்ததால் பிசிசிஐ அவரை அதிரடியாக நீக்கியது.
இருப்பினும் அதற்காக மனம் தளராமல் 2022 ஐபிஎல் தொடரில் தன்னை நம்பி வாங்கி கேப்டனாக நியமித்த குஜராத்துக்கு 487 ரன்களையும் 8 ரன்களையும் எடுத்து மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராகவும் அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பதவியில் அனைத்து வீரர்களையும் சிறப்பாக வழிநடத்தி முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று காட்டிய அவர் தன் மீதான விமர்சனங்களை துடைத்து தன்னை சிறந்த வீரர் என்பதை நிரூபித்தார்.
அதனால் அதிரடியாக நீக்கிய அதே தேர்வுக்குழு தாமாக முன்வந்து தேர்வு செய்த அவர் அதன்பின் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி உட்பட சமீபத்திய வெற்றிகளில் இந்தியாவின் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.
அந்த வகையில் அதே பழைய பாண்டியாவாக அவர் பார்முக்கு திரும்பியுள்ளது இந்தியாவுக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஹர்திக் பாண்டியா பல வருடங்களில் தேடினால் ஒரு முறை அரிதாக கிடைக்கும் திறமை வாய்ந்த வீரர் என்று முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கைரன் பொல்லார்ட் பாராட்டியுள்ளார். ஐபிஎல் தொடரில் கடந்த பல வருடங்களாக மிடில் ஆர்டரில் எதிரணி பவுலர்களை முரட்டுத்தனமாக பந்தாடிய இவர்கள் மிகச் சிறந்த பினிஷர்களாக மும்பைக்கு நிறைய வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து இந்த வருடம் பிரிந்தனர்.
இதுகுறித்து பேசிய பொல்லார்ட், “ஹர்டிக் பாண்டியா முன்னேற்றத்தில் உள்ளார். கடந்த சில மாதங்களாக அவர் மிகவும் கடினமான நேரங்களை சந்தித்து வந்தார். இருப்பினும் அவரது கடின உழைப்புக்கான பரிசுகள் தற்போது வருகிறது. கடினமான நேரங்களில் அவர் எவ்வாறு சிந்தித்து எப்படி செயல்படுவார் என்பது அவருடன் சில வருடங்கள் நெருங்கியிருந்ததால் எனக்கு தெரியும். அதனால் சர்வதேச கிரிக்கெட்டிலும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காகவும் அவர் வெளிப்படுத்தும் சிறந்த செயல்பாடுகளில் எனக்கு ஆச்சரியமில்லை.
அவர் களத்தில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன். சில நேரங்களில் அவர் சுமாராக செயல்பட்டாலும் அதற்காக அவரை விமர்சித்து கீழே இழுக்காமல் மகிழ்ச்சியுடன் விளையாடி வெற்றியை பெற்றுக்கொடுக்க ஆதரவு கொடுங்கள். சிறந்த கிரிக்கெட் வீரரான அவரை போன்றவர் பல வருடங்கள் அடங்கிய தலைமுறையில் ஒரு முறை தான் வருவார்கள். அவருக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் வாழ்த்துக்களையும் நான் தெரிவிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now