
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியில் 1998ஆம் ஆண்டு அறிமுகமானார் ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங். சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணியில் சுழல் ஜாம்பவான் அனில் கும்ப்ளேவுடன் இணைந்து இந்திய அணிக்காக பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார் ஹர்பஜன் சிங். கங்குலி மற்றும் தோனி தலைமையிலான இந்திய அணிகளில் முக்கிய அங்கம் வகித்தார்.
1998ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டுவரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய ஹர்பஜன் சிங், 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 417 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அண்மையில் தான் இவரது விக்கெட் சாதனையை முறியடித்தார் அஷ்வின். 236 ஒருநாள் போட்டிகளில் ஆடி 269 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஹர்பஜன் சிங், 28 டி20 போட்டிகளில் ஆடி 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
தற்போது 41 வயதாகிவிட்ட ஹர்பஜன் சிங்கிற்கு இனிமேல் ஐபிஎல்லிலும் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த அவர், அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு அறிவித்துள்ளார்.