
ஐபிஎல்லில் 2012ஆம் ஆண்டிலிருந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடிவருகிறார் ரவீந்திர ஜடேஜா. இடையில் 2016-2017 ஆகிய இரண்டு ஆண்டுகளும் சிஎஸ்கே அணி தடையால் ஐபிஎல்லில் ஆடவில்லை. அந்த 2 சீசன்களை தவிர, 2012லிருந்து தொடர்ச்சியாக சிஎஸ்கே அணியில் ஆடிவருகிறார் ஜடேஜா. சிஎஸ்கே அணியின் மேட்ச் வின்னர்களில் ஒருவராகவும், கேப்டன் தோனியின் ஆஸ்தான வீரராகவும் திகழ்ந்தவர் ஜடேஜா.
2022 ஐபிஎல்லுக்கு முன் தோனி கேப்டன்சியிலிருந்து விலகியதால், ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் ஜடேஜாவின் கேப்டன்சியில் சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளை சந்தித்தது. ஜடேஜா பெயரளவில் கேப்டனாக இருந்தாலும், தோனியே களத்தில் ஆதிக்கம் செலுத்தினார். தோனி தான் பெரும்பாலான முடிவுகளை எடுத்தார். ஆனால் தோல்விக்கு பின், அந்த தோல்வியை மட்டும் ஜடேஜா சுமக்க நேர்ந்தது.
ஒருகட்டத்தில் சுதந்திரமாக தன்னால் கேப்டனாக செயல்பட முடியவில்லை என்ற விரக்தியில், பாதி சீசனிலேயே கேப்டன்சியிலிருந்து விலகிய ஜடேஜா, காயம் காரணமாக அந்த சீசனில் முழுமையாக விளையாடமால் வெளியேறினார். 2022 ஐபிஎல்லில் 116 ரன்கள் மட்டுமே அடித்த ஜடேஜா, 5 விக்கெட் மட்டுமே வீழ்த்தியிருந்தார்.