ஐபிஎல் 2021: ராஜஸ்தானை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி!
ராஜ்ஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி கேபிடள்ஸ் அணி புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது
ஐபிஎல் 14வது சீசனில் அபுதாபியில் இன்று மாலை நடந்த போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் ராஜஸ்தான் ராயல்ஸும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணி 20 ஓவரில் 154 ரன்கள் அடித்தது. டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான்(8) மற்றும் பிரித்வி ஷா(10) ஆகிய இருவரும் சொற்ப ரன்களுக்கு தொடக்கத்திலேயே ஆட்டமிழக்க, ரிஷப் பண்ட்டும் ஷ்ரேயாஸ் ஐயரும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 62 ரன்களை சேர்த்தனர்.
Trending
ரிஷப் பண்ட் 24 ரன்களில் முஸ்தாஃபிசுரின் பந்தில் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடி 43 ரன்கள் அடித்த ஷ்ரேயாஸ் ஐயரை ராகுல் டெவாட்டியா வீழ்த்தினார். அதன்பின்னர் அதிரடியாக ஆடிய ஷிம்ரான் ஹெட்மயர் 16 பந்தில் 28 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அதன்பின்னர் லலித் யாதவ்(14), அக்ஸர் படேல்(12), அஷ்வின்(6) ஆகியோர் சிறிய பங்களிப்பு செய்ய, 20 ஓவரில் 154 ரன்கள் அடித்தது டெல்லி அணி.
இதையடுத்து 155 ரன்கள் என்ற இலக்கை விரட்டிவரும் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வாலும் லிவிங்ஸ்டோனும் இறங்கினர். முதல் ஓவரிலேயே லிவிங்ஸ்டோனை வெறும் ஒரு ரன்னுக்கு வெளியேற்றினார் ஆவேஷ் கான். ஜெய்ஸ்வால் 2வது ஓவரின் முதல் பந்தில் நோர்ட்ஜேவின் பந்துவீச்சில் 5 ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
சீனியர் வீரர் டேவிட் மில்லரும் அஷ்வினின் பந்தில் அவசரப்பட்டு இறங்கிவந்து ஆட முயன்று 7 ரன்னில் ஸ்டம்பிங் ஆகி வெளியேற, பவர்ப்ளேயில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு வெறும் 21 ரன்கள் மட்டுமே அடித்தது.
அதன்பின்னரும் மஹிபால் லோம்ரார்(19), ரியான் பராக்(2), ராகுல் திவேத்தியா(9) ஆகியோர் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்துகொண்டே இருக்க, மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்த சஞ்சு சாம்சன் தனி ஒருவனாக கடைசி வரை போராடினார். ஆனால் கடைசியில் போட்டி முடிவை நோக்கி நகர நகர, ராஜஸ்தான் அணிக்கு தேவைப்படும் ரன்ரேட் அதிகரித்து கொண்டே சென்றது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
மறுமுனையில் ஆதரவு கிடைக்காததால் சஞ்சு சாம்சன் ஒருவரால் இலக்கை எட்டுமளவிற்கு எடுத்துச்செல்லமுடியவில்லை. சாம்சன் 70 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் இருந்தாலும் கூட, ராஜஸ்தான் அணியால் 20 ஓவரில் 121 ரன்கள் மட்டுமே அடித்ததையடுத்து, 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி கேபிடள்ஸ் அணி, புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now