-mdl.jpg)
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. இப்போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பிய போதிலும் கடைசி நேரத்தில் களமிறங்கி 4 பவுண்டரி 2 சிக்சருடன் 41* (19) ரன்கள் குவித்த தினேஷ் கார்த்திக் சூப்பரான பினிசிங் கொடுத்து காப்பாற்றினார்.
கடந்த 2004இல் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அறிமுகமான இவரது இளமை கால கட்டத்தில் அதே வருடம் அறிமுகமாகி அதிரடியாக பேட்டிங் செய்து கேப்டனாக 3 உலகக் கோப்பைகளை வென்று கொடுத்த எம்எஸ் தோனி நிரந்தர விக்கெட் கீப்பராக இருந்த காரணத்தால் தொடர்ச்சியான வாய்ப்புகளும் ஆதரவும் கிடைக்காமலேயே காலங்கள் உருண்டோடியது. கடைசியாக கடந்த 2019 உலக கோப்பையில் விளையாடிய அவரை அத்தோடு அணி நிர்வாகமும் மொத்தமாக கழற்றி விட்டாலும் மனம் தளராத அவர் ஐபிஎல் தொடரிலும் தமிழகத்துக்கு உள்ளூர் கிரிக்கெட்டிலும் விளையாடி வந்தார்.
இருப்பினும் அவரை இந்திய அணி நிர்வாகம் கண்டு கொள்ளாததால் கடந்த 2021இல் இங்கிலாந்தின் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக அவதரித்தார். மேலும் 35 வயதைக் கடந்து விட்ட காரணத்தால் அவரது இந்திய கிரிக்கெட் கேரியர் முடிந்ததாக அனைவரும் நினைத்தனர். ஆனாலும் டி20 கிரிக்கெட்டில் இன்னும் நம்மால் சாதிக்க முடியும் என்று உணர்ந்த அவர் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வெல்ல வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்துடன் கடினமாக உழைத்து பயிற்சிகளை எடுத்து ஐபிஎல் 2022 தொடரில் பெங்களூரு அணிக்காக 183.33 என்ற ஸ்டிரைக் ரேட்டில் கடைசி நேரத்தில் களமிறங்கி எதிரணிகளை வெளுத்து வாங்கி சிறந்த பினிஷராக செயல்பட்டார்.