
இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் தற்போது வர்ணனையாளர் அவதாரம் எடுத்துள்ளார். இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியாவில் இருந்து இரண்டு வர்ணனையாளர்கள் மட்டுமே இங்கிலாந்து சென்றுள்ளனர். அவர்கள் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கரும், இந்நாள் வீரர் தினேஷ் கார்த்திக் மட்டுமே ஆவர்.
இந்நிலையில், இளம் வீரர் ரிஷப் பந்த்தின் ஆட்டம், இந்திய அணிக்கு எவ்வாறு வலு சேர்க்கிறது என்பது குறித்து தினேஷ் கார்த்திக் மனம் திறந்து பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய தினேஷ் கார்த்திக், "கடந்த சில மாதங்களாக மிகப் பிரமாதமான ஆட்டத்தை ரிஷப் பந்த் வெளிப்படுத்தியிருக்கிறார். அதைவிட அவர் சில இக்கட்டான போட்டிகளில் சிறப்பாக விளையாடி அணியை காப்பாற்றியிருக்கிறார். உலகக் கோப்பை இறுதிப் போட்டியாக இருந்தாலும், ஐபிஎல் இறுதிப்போட்டியாக இருந்தாலும், அவரின் ஆட்டம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். மேலும், அவருக்கு சவால்கள் மிகவும் பிடிக்கும் என நினைக்கிறேன். அதுதான் அவர் தொடர்ந்து செயல்பட உறுதுணையாக இருக்கிறது.