அடுத்த முறை இன்னும் பலமாக திரும்புவோம் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
இந்த ஆண்டு நிறைய இளம் வீரர்கள் எங்கள் அணியில் கிடைத்துள்ளனர். நிச்சயம் அடுத்த மூன்று ஆண்டுக்கான திட்டம் எங்களிடம் இருக்கிறது என ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிபயர் போட்டி நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி குஜராத் அணியுடன் இறுதிப் போட்டியில் மோதும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்று நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசியது. அதன்படி பெங்களூரு அணி முதலாவதாக பேட்டிங் செய்து 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை மட்டுமே குவித்தது. பெங்களூர் அணி சார்பாக பட்டிதார் 58 ரன்களையும், டூபிளெஸ்ஸிஸ் 25 ரன்களையும் குவித்தனர்.
Trending
இதனைத்தொடர்ந்து 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி எளிதாகவே பெங்களூர் அணியை வீழ்த்தியது என்று கூறலாம். ஏனெனில் துவக்கம் முதலே அதிரடி காண்பித்த ராஜஸ்தான் அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 161 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் துவக்க வீரர் பட்லர் ஆட்டமிழக்காமல் 106 ரன்கள், கேப்டன் சஞ்சு சாம்சன் 23 ரன்களையும் குவித்தனர். இந்த வெற்றியின் மூலம் தற்போது ராஜஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டாவது கோப்பையை கைப்பற்றுமா என்று எதிர்பார்த்த பெங்களூரு அணிக்கு மீண்டும் ஏமாற்றமே கிடைத்தது. பின்னர் போட்டி முடிந்து ராஜஸ்தான் அணிக்கு எதிரான இந்த தோல்வி குறித்து பேசிய பெங்களூர் அணியின் கேப்டன் டூபிளெசிஸ் கூறியதாவது, “நாங்கள் இரண்டாவதாக பீல்டிங் செய்ய உள்ளே நுழையும்போதே நிறைய ரன்களை நாங்கள் குறைவாக அடித்து விட்டோம் என்று நினைத்தேன். முதலில் நாங்கள் பேட்டிங் செய்யும்போது 3-4 ஓவர்கள் எங்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது.
ஏனெனில் இந்த மைதானத்தில் 180 ரன்கள் வரை அடித்து இருந்தால் அது சரியாக இருந்திருக்கும். ஆனால் நாங்கள் பேட்டிங் செய்யும்போது முதல் 6 ஓவர்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியது போன்று விளையாடி விட்டோம். இரண்டாவதாக ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்யும்போது மைதானம் அவர்களுக்கு மிகவும் உதவியது. இருந்தாலும் ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டதாக பெருமையடைகிறேன்.
இது ஆர்சிபி அணிக்காக என்னுடைய முதல் வருடம் எனவே அணி நிர்வாகத்திற்கும் வீரர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வருடம் முடிந்தளவு எங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம். ஹர்ஷல் படேல் மிகச் சிறப்பான ஒரு வீரராக திகழ்ந்து வருகிறார்.
அதேபோன்று தினேஷ் கார்த்திக்கும் இந்திய அணிக்கு மீண்டும் தேர்வானதில் மகிழ்ச்சி. இந்த போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்தது சற்று வருத்த,மாக இருந்தாலும் ராஜஸ்தான் அணி எங்களை விட அனைத்து விதத்திலும் இந்த வெற்றிக்கு தகுதியான அணியாக நினைக்கிறேன்.
அந்த அளவிற்கு அவர்கள் இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். எங்கள் அணிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. இந்த ஆண்டு நிறைய இளம் வீரர்கள் எங்கள் அணியில் கிடைத்துள்ளனர். நிச்சயம் அடுத்த மூன்று ஆண்டுக்கான திட்டம் எங்களிடம் இருக்கிறது. நிச்சயம் அதை நாங்கள் வரும் ஆண்டுகளில் செயல்படுத்தி அசத்துவோம்” என தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now