
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நேற்று ட்ரினிடாட் நகரில் துவங்கியது. அதன்படி நேற்று குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கலஸ் பூரான் முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தார்.
அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 97 ரன்களையும், துவக்க வீரர் கில் 64 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 54 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது ஆரம்பத்தில் இருந்தே இந்திய வீரர்களுக்கு சரியான போட்டியை அளித்து வந்தது. சமீப காலமாகவே 50 ஓவர்கள் போட்டிகளில் முழுவதுமாக பேட்டிங் செய்யாமல் ஆட்டம் இழந்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி இம்முறை இந்திய அணியை எதிர்த்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்கள் குவித்து இறுதியில் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் மிக நெருக்கமாக வந்து தோல்வியை சந்தித்தது.