
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 2023 முதல் 2027ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கான ஒளிபரப்பு உரிமையை 4 பிரிவுகளாக பிரித்து பிசிசிஐ ஏலம் விட்டது. 3 நாட்களாக நடைபெற்ற இந்த மின்னணு ஏலம் நேற்று முடிவடைந்தது. ஏலத்தின் 2ஆவது நாளான நேற்று முன்தினம் ஆசிய துணைக் கண்டத்தில் மட்டும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை டிஸ்னியின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமம் ரூ.23,575 கோடிக்கு வாங்கியது. ஒரு ஆட்டத்துக்கு ரூ.57.50 கோடி வீதம் 410 ஆட்டங்களுக்கு இந்த தொகையை ஸ்டார் குழுமம் செலுத்தும்.
அதேவேளையில் டிஜிட்டல் உரிமத்தை ஒரு ஆட்டத்துக்கு ரூ.50 கோடி வீதம் 410 ஆட்டங்களை ஒளிபரப்பும் உரிமையை ரூ.20,500 கோடிக்கு ரிலையன்ஸின் வையாகாம் 18 நிறுவனம் ஏலம் எடுத்தது.
மின்னணு ஏலத்தின் 3ஆவது நாளான நேற்று 18 போட்டிகளுக்கு (முதல் போட்டி, பிளே ஆஃப் சுற்றின் 4 ஆட்டங்கள், வார இறுதியில் ஒரே நாளில் நடத்தப்படும் இரு ஆட்டங்கள்) டிஜிட்டல் உரிமை இல்லாத தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைக்கான ஏலத்தை வயாகாம் 18 குழுமம் கைப்பற்றியது. 5 வருட காலத்தில் 98 ஆட்டங்களை உள்ளடக்கிய இந்த தொகுப்பை அந்த நிறுவனம் ரூ.3,257.52 கோடிக்கு ஏலம் எடுத்தது.